சர்ப்பக்காடுகளில் எதற்காக விளக்கேற்றி வைக்கவேண்டும்?
சர்ப்பக் காடுகளில் விளக்கு வைக்க வேண்டும் என்று கூறும் போது 'விஷப்பாம்புக்கு ஏன் விளக்கு வைக்க வேண்டும்' என்ற கேள்வி எழலாம்.
ஆனால் பாம்புக்கு மட்டுமல்ல நாம் விளக்கேற்றி வைப்பது. பாம்புகள் வசிக்கும் காடுகளையே நாம் விளக்கேற்றி வைத்து ஆராதிக்கின்றோம் என்பதே நிஜம்.
விருட்ச பூஜை என்பதை ஆத்ம பூஜையாகக் கருதலாம். மரங்கள், கொடிகள், பறவைகள்,, மிருகங்கள் முதலியவற்றை நம் ஆத்மாவுக்கு சமமாக நேசிக்கவும் ஆராதிக்கவும் செய்வதால் எல்லாவற்றிலும் குடி கொள்ளும் ஜீவசக்தி இறைவனே என்ற அத்வைத தத்துவத்தின் அடிப்படை உண்மையை உணர்கின்றோம். ஜீவ கருணை, தெய்வ ஆராதனை அகிம்சைவிரதம் என்பவற்றை நிலை நாட்டுகிறோம் .
அனேக வீடுகளுக்கும் அருகாமையில் மரக்கூட்டங்கள் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து நம் முன்னோர்கள் சர்ப்பக்காடுகளில் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று போதித்தனர். பெரிய மரங்களும், புதர்காடுகளும் மூலிகைச் செடிகளும் நிறைந்த காடுகளில் சர்ப்ப தேவதைகள் குடியிருப்பதாகக் கருதியிருந்தனர்.
சுத்தமான வாயுவும் தோட்டத்தில் ஈரமும் நிழலும் தந்து வீட்டுச்சுற்றுச் சூழலை பரிசுத்தமாகப் பாதுகாப்பது இந்த காடுகளே. மேலும் கிணறுகளிலும் குளங்களிலும் சுத்தமான நீர் கிடைப்பதையும் உறுதி செய்கின்றன. மரங்கள், மூலிகைச் செடிகள் முதலியவை சுலபமாக வளருவதற்கு உதவும் சர்ப்பக்காடுகள் 'ஒரு சம்பூரண சுற்றுச் சூழ்நிலை அதாவது 'இகௌசிஸ்டம்' ஆக விளங்குகின்றது. அதனாலேயே இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து அரசாங்கம் காடுகளை அமைக்க முன்வருகின்றது.
காடுகளை மூட நம்பிக்கைகளின் உறைவிடமாக எண்ணியிருந்தவர்கள் அவை சுற்றுச் சூழலைப் பாதுகாக்க உதவும் என்று நவீன விஞ்ஞானம் வாயிலாகக் கண்டறிந்துள்ளனர்.
கார்பன் உட்கொண்டு மனித வாழ்வுக்கு மிக அவசியமான ஆக்சிஜன் பெருமளவில் அளிக்க மரங்களுக்கு இயலும் என்பதே இந்த சர்ப்பக் காடுகள் அமைவதன் பயன். இந்த பாரதக் கருத்தை அண்மையில் ஜெர்மனியில் வெளியிடப்படும் 'காண்டம்பரரி சயின்ஸ்' என்ற பத்திரிகையில் ஆமோதித்திருப்பதைக் காணலாம்.
வாயில்லாப் பிராணிகளிடம் நம் நாட்டு ஆசாரியர்கள் செலுத்தியிருந்த நேசத்தின் பாகமாகவே சர்ப்பக்காடுகளில் வசிக்கும் சாட்பங்களை தேவதைகளாகக் கண்டு வந்திருந்தனர்.