ஆரோக்கியமாக வாழ சாப்பிட வேண்டியதும்
சாப்பிடக் கூடாததும்
உணவு குணத்தை மாற்றுகிறது.
உணவால் குணம் மாறுகிறது. சத்துவ குணம், ரஜஸ் குணம், தமோ குணம் என்ற இந்த மூன்று குணங்களும் உணவால்
மாறுகின்றன. சத்துவ குணம் உள்ள உணவுகளை உட்கொண்டால் சாத்வீக குணம் ஏற்படும்.
ராஜச குணத்தைக் கொடுக்கும் உணவுகளை உட்கொண்டால் ரஜஸ் குணம் ஏற்படுகிறது.
தாமச குணத்தைக் கொடுக்கும் உணவுகளை உட்கொண்டால் தமோ குணம் ஏற்படுகிறது.
எந்தெந்த உணவுகளில் என்னென்ன குணத்தைக் கொடுக்கும் பண்புகள் அடங்கி உள்ளன என்பதைப் பார்ப்போம்.
சாத்வீக உணவு வகைகள்:
உணவின் தரம், சுவை, அளவு எல்லாம் மிதமானதாக இருந்தால் அது சாத்வீக உணவு. இந்த உணவைத்தான் மகான்கள், துறவிகள் போன்றோர் ஏற்றுக் கொள்கின்றனர்.
இந்த சாத்வீக உணவுகளைச் சாப்பிட்டால் சாத்வீக குணம் உண்டாகும். மனம் அமைதியாக இருக்கும். எதிலும் நடுநிலை வகிக்கும் குணம் உண்டாகும். தெய்வீக உணர்வு நிறையும். புனித மனப்பான்மை ஏற்படும். எதையும் ஒன்றாகப் பார்க்கும்
மனப்பான்மை ஏற்படும். பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணம் தோன்றாது.
உண்மை பேசுவதில் உள்ளம் உறுதியாக இருக்கும். தியானம், தவம் ஆகியவற்றில் மனம் ஈடுபாடு கொள்ளும். மனம் கருணை நிறைந்ததாக இருக்கும். பிறருடைய தவறுகளை மன்னிக்கும் மனப்பான்மை இருக்கும்.
மனம் பரபரப்பாக இல்லாமல் திருப்தியுடன் இருக்கும். பிறர்பொருளில் மனம் நாட்டம் கொள்ளாது.
இந்த நல்ல குணங்கள்தான் சத்துவ குணம் ஆகும். பொதுவாகக் கூறினால் தூய்மை, இணக்கம், ஒளி, நன்மை
ஆகியவற்றைக் கொண்டவை.
சாத்வீகம் நிலவும்போது அற்புதமான உடல் நலத்தையும், அமைதியையும் அனுபவிக்கலாம். சாத்வீக குணத்தைப் பெற வேண்டும் என்றால் கீழ்க்கண்ட உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.
பசும்பால், தயிர், வெண்ணெய், நெய், பாலாடை, தயிர் இவை யாவும் பசும்பாலிலிருந்து தயார் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்.
சிவப்பு அரிசி, பச்சரிசி, தீட்டப்படாத அரிசி, ஓட்ஸ், சம்பா அரிசி, கோதுமை, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், தேன், பேரிச்சம்பழம், கல்கண்டு, வெல்லம், வெல்லச் சர்க்கரை, சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, வெள்ளை மிளகு, சீரகம், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், வெந்தயம், எள், உளுந்து, அவல், பொரி, பச்சைப் பயறு, திணை.
பருப்புகள்: உளுந்து, உலர்ந்த பட்டாணி நீங்கலாக உள்ள எல்லா பருப்புகளும்.
பழங்கள்: ஆப்பிள், எல்லா வகை வாழைப் பழங்களும், மாம்பழம், ஆரஞ்சு, பேரிக்காய், அன்னாசி, கொய்யாப்பழம், பப்பாளிப் பழம், மாதுளம்பழம், பெர்ரி பழங்கள், சப்போட்டா பழங்கள், பீச் பழங்கள், தக்காளிப் பழம், முலாம்பழம், பேரீச்சம்பழம், திராட்சை, உலர்ந்த திராட்சை, அத்திப்பழம், எலுமிச்சம்பழம், நார்த்தம்பழம், கிச்சிலிப்பழம், நாவல்பழம், பலாப்பழம், விளாம்பழம்.
காய்கறிகள்: கேரட், கொடியில் காய்க்கும் எல்லா வகையான காய்கள். சாம்பல் பூசணி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு,
சேப்பங்கிழங்கு, கீரைகள், முட்டைக் கோசு, கறிவேப்பிலை, வேப்பம்பூ, தூதுவளை, பிரண்டை, கீரைத்தண்டு, வாழைத்தண்டு, தேங்காய், நெல்லிக்காய், சுண்டைக்காய், மாங்காய், இலந்தைப்பழம், வெள்ளரிக் காய், பலாக்காய், கத்தரிக்காய்.
பலதரப்பட்டவை: கற்கண்டு, கரும்புச் சாறு, தேன், பாதாம் பருப்பு, வேர்க்கடலை, தேங்காய், இளநீர், பால் பாயாசம் ஆகியவை.
ரஜோ குண உணவு வகைகள்:-
வீரம், காமம், கோபம், அதிகாரம் செய்தல் விறுவிறுப்பு, பரபரப்பு, சுறுசுறுப்பு, அதிக துணிச்சல், மன எழுச்சிகளின்
வெளிப்பாடு, எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிதுடிப்பு, எதையும் முடிக்க வேண்டும் என்ற தீவிர குணம் போன்ற குணங்கள் ரஜோ குணம் ஆகும்.
ரஜோ குணம் ஓங்கி இருந்தால் மனம் அமைதியாக இருக்காது. அலைக்கழிக்கப்படும். கொந்தளிப்பு ஏற்படும், கவனம் பல்வேறு வழிகளில் செல்லும். சாதிக்கத் துடிக்கும் மனிதர்களின் குணம் ரஜோ குணம். அதிகாரத்தில் உள்ளவர்களின் குணம் ரஜோ குணம்.
ரஜோ குணத்தைக் கொடுக்கும் உணவு வகைகள்:-
இறைச்சி, மீன், முட்டை, தேனீர், காப்பி, கொக்கோ, மிளகாய், புளி, ஊறுகாய், பெருங்காயம், கடுகு, நாக்கில் பட்டால்
விறுவிறு என எரிச்சல் தரும் உணவுகள், வாழைப் பூ, புதினா, கருணைக் கிழங்கு, களிப்பாக்கு, ஓமம், கசகசா, பூசணி,
புடலங்காய், லவங்கப் பட்டை, சமையல் உப்பு, கடுகு, மல்லி, மஞ்சள் முந்திரிப் பருப்பு, அன்னாசி மாதுளை.
துவரம் பருப்பு, காரங்கள், மிகவும் தாளித்து மணம் ஊட்டிய உணவுகள், வறண்டு போன உணவுகள், மிகவும் சூடான உணவுகள், காரம், புளிப்பு, உப்பு மிகுதியான உணவுகள், காரசாரமான உணவுகள், எண்ணெய், சீனி, முள்ளங்கி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், முருங்ககைக்காய், வறுக்கப்பட்டவை, இட்லி, தோசை போன்ற மாவுப் பண்டங்கள், எள், இவைகள் எல்லாம் உணர்ச்சிகளைத் தூண்டி ரஜோ குணத்தைக் கொடுக்கும்.
தமோ குண உணவு வகைகள்:-
சோம்பேறித்தனமாக இருத்தல், தீய எண்ணங்களை வளர்த்துக் கொள்ளல், தகாத எண்ணங்கள் தோன்றுதல், மிக அதிக கோபம், முரட்டுத்தனம், மூர்க்கத்தனம், எதிலும், நிலைக்காத சஞ்சலம் நிறைந்த மனம், அதிக தூக்கம், சிந்திக்காது செயல்படும் தன்மை, சூழ்நிலை மற்றும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி குற்றம் செய்ய வைக்கும் தன்மை போன்றவை தமோ குணத்திற்குரியது.
எதையும் மனம் கவனிக்காது. மனம் சோர்வுடன் இருக்கும். செயலற்று இருக்கும். செயலின்மை, இருள், அஞ்ஞானம் ஆகியவற்றை இக்குணம் குறிக்கிறது.
தமோ குணத்தைக் கொடுக்கும் உணவு வகைகள்:-
மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மது, கள், சாராயம், போன்ற பானங்கள், எல்லாவகை மருந்துகள், கஞ்சா, புகையிலை, வெங்காயம், பூண்டு, பழைய உணவுகள், அழுகிப் போன உணவுகள், அசுத்தமான உணவுகள், அரைகுறையாக வெந்தவை
ஆகியவை.