முதலாளி ஆகும் யோகம் இருக்கிறதா!
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தனது பொறுப்பில் ஒரு குறிப்பிட்ட ஆட்கள் வேலை பார்க்க வேண்டும் என்றும், தான் அவர்களுக்கு முதலாளியாக இருக்க வேண்டும் எனவும் ஆசை இருக்கும். ஆனால் அது அனைவருக்கும் நிறைவேறுவதில்லை.
உலகில் வாழும் எல்லா மனிதர்களும் தனித்தனியானவை ஆனாலும், ஒன்றை ஒன்று சார்ந்து தான் வாழ்கின்றன. பூமியில் தான் வாழ்வதற்கு பணம் தேவைப்படும் உயிர்கள் மனிதர்கள் மட்டுமே! வேறு எந்த உயிரினங்களுக்கும் பணத்தின் தேவை அவசியமில்லை. மனிதன் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று பணம் ஆகும்.
மனிதர்கள் பணத்தை பெற, அரசுவேலை, தனியார் துறை வேலை, வியாபாரம், சொந்தத் தொழில், கூலித்தொழில் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்து வாழ்கிறார்கள். இந்த சூழலில் முதலாளி ஆகும் யோகம் யாருக்கு உள்ளது என்று பார்ப்போம்.
முதலாளி என்றால், ஒரு சிறிய அல்லது பெரிய அளவில் முதலீடு போட்டு வியாபாரம் செய்பவர்களை முதலாளி என்கிறோம். ஆனால் முதலீடு செய்யும் அந்த நபருக்கு முதலீடு, விசுவாசமான தொழிலாளர்கள், நல்ல லாபம் இவை மூன்றும் இணைந்தால் தான் அவர் நிரந்தர முதலாளியாக இருக்க முடியும். இல்லாவிட்டால், தற்காலிக முதலாளியாகத்தான் இருக்க முடியும்.
ஒரு தொழிலை தொடங்குவதற்கு முன், அந்த தொழிலைப் பற்றிய நுணுக்கங்கள் அடிப்படை அளவானது தெரிந்து இருக்க வேண்டும். மேலும் ஒரு நல்ல முதலாளிக்கு, நன்றாகத் தொழில் தெரிந்த தொழிலாளிகள் கிடைத்தாலும் அந்தத் தொழிலாளர்கள் விசுவாசம் உள்ளவர்களாகக் கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
செய்யும் தொழில் சிறப்பாக திகழ ஜாதகத்தில் ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானம் சிறப்பாக சுப பலன்களுடன் இருக்க வேண்டும். லக்னாதிபதி ஒன்பதில் நிற்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட, ஒன்பதுக்குடையவன் லக்னத்தில் நிற்க வேண்டும்.
லக்னம் எதுவாக இருந்தாலும், யோகத்தின் அதிபதி கெடாமல் சுப பலத்துடன் இருத்தல் நல்லது. தொழில் செய்பவரின் ஜாதகத்தில் ஒன்பதுக்குடையவன் பத்திலும், பத்துக்குடையவன் ஒன்பதிலும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், அவருக்கு விசுவாசமுள்ள நல்ல தொழிலாளர்கள் அமைவார்கள். இத்தகைய அமைப்பைத்தான் தர்மகர்மாதிபதி யோகம் என்பார்கள்.
முதலாளிகள் தான் போட்ட முதலீடு நஷ;டமின்றி திரும்பக் கிடைக்க வேண்டுமானால், சம்மந்தப்பட்ட ஜாதகருக்கு குருவானவர் நல்ல நிலையில் கெட்டு போகமால் இருக்க வேண்டும். பத்துக்கு உடைய கிரகம் 1, 2, 4, 9, 10, 11 ஆகிய இடங்களில் அமைவது மிகவும் ஒரு சிறப்பான அம்சமாகும்.
ஆளுமைப் பண்புக்கு உரிய கிரகம் சூரியன் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் சூரியனின் ஆட்சி அல்லது உச்சம் மற்றும் வலிமை பெற்று இருக்கிறதோ அந்த அளவை பொறுத்து அவரது ஆளுமைப் பண்பும், தனித்திறனும் மற்றும் இக்கட்டான சூழலில் முடிவெடுக்கும் திறனும் வெளிப்படும்.
ஒரு ஜாதகர் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவதற்கு, அவருடைய ஜாதகத்தில் குரு, சூரியன், புதன் ஆகிய மூவரும் வலுவான நிலையில் இருக்க வேண்டும்.
இது போன்ற ஜாதக அமைப்புகள் உள்ளவர்கள், ஏதோ தசா புக்தி காரணமாக வேண்டுமானால் சில காலம் மாதச் சம்பள வாழ்க்கைக்குப் போகலாம். ஆனாலும், விரைவில் அவர் அந்த தொழில் உள்ள நுட்பங்களை கற்றுக் கொண்டு முதலாளி ஆகிவிடுவார்கள்.