காதல் ரேகை...!!
கைகள் கண்ணாடியைப் போன்றவை. கைகளில் உள்ள ரேகைகளை வைத்து ஒருவரின் குணாதிசயங்கள், உடல்நலம், திருமணம் மற்றும் காதல் என வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.
அந்த வகையில் உங்கள் காதல் வெற்றி பெறுமா? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
காதல் ரேகை அல்லது திருமண ரேகை நமது உள்ளங்கைகளில் சுண்டு விரலுக்கு கீழே உள்ள கிடைமட்ட ரேகை ஆகும்.
காதல் ரேகையின் நீளம் :
காதல் ரேகையின் நீளத்தை வைத்து காதல் உறவு எவ்வளவு காலம் நிலைக்கும்? என தெரிந்து கொள்ளலாம். நீளம் குறைவாக இருந்தால் அந்த உறவு அதிக காலம் நிலைத்திருக்காது.
காதல் ரேகையின் அகலம் :
காதல் ரேகை தடித்து இருந்தால் அது உங்கள் காதல் உறவின் மேல் நீங்கள் கொண்ட அன்பின் ஆழத்தை காட்டும். மெல்லியதாக இருந்தால் உறவின் ஆழமின்மையை குறிக்கும்.
குறுகிய காதல் ரேகை :
இதய ரேகையின் நீளம் சிறியதாக இருந்தால் அதாவது, அதன் நீளம் நடுவிரல் வரை மட்டும் நீடித்து இருந்தால் அவர்கள் சுயநலமிக்கவர்களாகவும், இரக்கமற்ற மற்றும் குறுகிய மனநிலை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இதனால் உறவுகளைப் பற்றி அதிகம் சிந்திக்க மாட்டார்கள். இதனால் காதல் வாழ்க்கையும் சுமூகமாக செல்லாமல், தனியாக இருக்க நேரிடும்.
நீண்ட காதல் ரேகை :
காதல் ரேகை மிக நீளமாக அதாவது, உள்ளங்கையின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை நீடித்து இருந்தால் முகத்திற்கு நேராக பேசக்கூடிய நபராக இருப்பார்கள். மேலும் காதல் வாழ்க்கையில் குறுக்குவழியை வெறுப்பார்கள்.
இவர்களின் காதல் உறவில் விரிசல் ஏற்படும்போது தாங்கிக் கொள்ள மாட்டார்கள். காதல் உறவில் மிகவும் உண்மையாகவும் இருப்பார்கள்.
காதல் ரேகை வியாழன் மேட்டில் அமைந்தால் :
காதல் ரேகை வியாழன் மேடு வரை நீண்டு இருந்தால் காதலில் கனவு மற்றும் நிறைய எதிர்பார்ப்புகள் கொண்டவர்களாக இருப்பார்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பது இவர்களின் எண்ணமாக இருக்கும்.
காதல் ரேகை வியாழன் மற்றும் சனி மேட்டிற்கு இடையில் அமைந்து இருந்தால் உண்மையான காதல் மற்றும் அன்பு கொண்டு இருப்பார்கள். காதல் உறவில் இவர்களை முழுமையாக அர்ப்பணித்து விடுவார்கள்.
காதல் ரேகையில் பிளவு :
காதல் ரேகையின் நுனியில் மூன்று பிளவுகள் காணப்பட்டால் அமைதியை விரும்பும் நபராக இருப்பார்கள். ஆனால் இவர்களின் காதல் வாழ்க்கை வழக்கத்தை விட கொஞ்சம் கடினமாகவே அமையும்.
அதேபோல் காதல் ரேகையின் நுனியில் அதிக பிளவு தென்பட்டால் ஒரு உண்மையான காதல் வாழ்க்கையை பெறுவார்கள். எப்பொழுதும் காதலில் மாறாமல் இருப்பார்கள்.