![]() |
தங்கம் சேர எளிய பரிகாரங்கள் |
இல்லத்தில் தங்கம் சேர எளிய பரிகாரங்கள் .
சிலர் பிறந்தது முதல் எப்போதும் பொன்னோடும், பொருளோடும் வாழ்வார்கள். நல்ல அணிகலன்களை அணிந்து மகிழ்வார்கள். ஆனால் பலர் தங்கம் எங்கே என்று தேடுவார்கள். எப்போதும் நல்ல அணிகலன்களோடு வாழும் ஜாதகம் பெற்றவர்கள் யார் என்பதையும், வாழ்நாள் முழுவதும் பொன்னகையோடும், புன்னகையோடும் வாழ செய்ய வேண்டிய பரிகாரங்களை காண்போம்.
பிள்ளைகள் பிறந்தவுடன் அவர்கள் ஜாதகத்தை நன்கு பரிசீலித்து அவர்கள் பொன்னகையுடன் வாழ்வார்களா? அல்லது சிரமத்துடன் வாழ்வார்களா? என்று ஆராய்ந்து அதற்கு தகுந்த பரிகாரம் செய்ய வேண்டும். பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள், குழந்தை பிறந்தது முதலே தங்கம் சேர்த்தால் தான் திருமண வயதில் சிரமமில்லாமல் சமாளிக்க முடியும். பெற்றோர் இதை உணர்ந்து சேமிப்பையும் உயர்த்த வேண்டும்.
இனி அணிகலன்களைப் பெற்று வாழும் யோக ஜாதங்களை பற்றி பார்ப்போம். லக்னத்துக்கு 3ஆம் பாவத்தின் சுக்கிரன் நிற்கவும், 3ஆம் வீட்டிற்குரிய கிரகம் சுக்கிரன் வீட்டில் நிற்கவும் அமைந்துள்ள ஜாதகர்கள், முத்துமாலை அணியும் யோகம் உள்ளவர்கள். இவர்கள் உடல் எப்போதும் பொன்னிறமாக இருக்கும். லக்னத்துக்கு 3ஆம் வீட்டில் சந்திரனும், 5ஆம் வீட்டில் குரு பகவானும் வலிமைபெற்று அமைந்தால், அந்த ஜாதகர்கள் நவரத்தின மாலை அணியும் அளவுக்கு யோகத்தைப் பெற்றவர்கள்.
லக்னத்துக்கு 3ஆம் வீட்டில் கேது நின்றிடவும், 3ஆம் வீட்டிற்குரிய கிரகமும், 2ஆம் வீட்டிற்குரிய கிரகமும் 9ஆம் வீட்டில் சேர்ந்திருக்கும் அமைப்பைப் பெற்ற ஜாதகர்கள், எப்போதும் நவரத்தினங்களை அணிவார்கள்.
லக்னத்துக்கு 8ஆம் வீட்டிற்குரிய கிரகமும், ராகுவும் சேர்ந்து 9ஆம் வீட்டில் நின்றால், ஜாதகர்கள் மத்திய வயதில் சிலகாலம் பொன் ஆபரணங்களை அணியும் யோகத்தைப் பெறுவர். பிறப்பு ஜாதகப்படி சந்திரன் நின்ற வீட்டிற்கு 2ஆம் வீட்டிற்குரிய கிரகம், லக்னத்துக்கு விரய ஸ்தானமான 12ஆம் வீட்டில் நின்று, அந்த கிரகத்தை செவ்வாய் பார்த்தால் ஜாதகருக்கு ஏராளமான செல்வமும் ஆடை, ஆபரணங்களும் இருக்கும். ஆனால் அவர் எளிமையாக எதையும் அணியாமல் வாழ்வார்.
பிறப்பு ஜாதகத்தில் 3ஆம் வீட்டிற்குரிய கிரகம் 8ஆம் வீட்டில் நிற்கவும், 8ஆம் வீட்டிற்குரிய கிரகம் 3ஆம் வீட்டில் நின்றிடவும் அமைந்த ஜாதகர்கள் தங்க நகைகளின் மீது பற்றுள்ளவர்கள். ஆனால் இவர்கள் அணிவதற்கு தகுந்த வசதி வாய்ப்புகள் கிடைக்காமல் மற்றவர்களைப் பார்த்து வருந்துவார்கள்.
எப்போதும் பொன்னகையோடு வாழ்வதற்கும், இல்லத்தில் தங்கம் தங்குவதற்கும் செய்து கொள்ள வேண்டிய பரிகாரத்தைப் பற்றி பார்ப்போம்.
பரிகாரம் :
எப்போது நகை வாங்கினாலும், நல்ல நாளில், குளிகன் காலத்தில் வாங்க வேண்டும். குளிகன் காலத்தில் அணிய வேண்டும். இப்படிச் செய்தால் தங்க ஆபரணம் உங்களைவிட்டுப் போகாது.
தங்கத்திற்குரிய கடவுள் குரு பகவான். எனவே தான் அவரை பொன்னன் என்று அழைக்கிறோம். நகை வேண்டுவோர் வியாழக்கிழமையில் குரு பகவானை வேண்டிவர, நகை படிப்படியாக வந்துசேரும். கஷடமும் தீரும். அனுக்கிரகமும் கிடைக்கும்.