![]() |
கணவன்-மனைவி ஒற்றுமை வளர. |
கணவன்-மனைவி ஒற்றுமை வளர...!
இன்று ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் என்று சொல்லப்படுவது கணவன்-மனைவி உறவில் இருக்கும் சிக்கல்கள் தான். இதனால் பலதரப்பட்ட மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர். அவ்வாறு உள்ளவர்களின் குடும்ப நிலைகள் மாறி கணவன்-மனைவி ஒற்றுமை ஓங்கி நலமுடன் வாழ கேதார கௌரி விரதம் முறையை மேற்கொள்ளலாம்.
கேதார கௌரி விரதம் :
கேதார கௌரி விரதம் என்பது பிரதி வருடம் தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் ஆகும். ஒரு சில குடும்பங்களில் அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை முன்னிட்டு சதுர்த்தியிலேயே அதாவது, தீபாவளி அன்றே இந்த விரதத்தை கடைபிடிக்கும் பழக்கமும் உள்ளது.
இந்த விரதத்தினை மேற்கொண்டு பார்வதி தேவி, சிவபெருமானின் உடலில் சரிபாகத்தினைப் பெற்றாள் என்று புராணங்கள் சொல்கின்றன. தம்பதியருக்குள் உண்டாகும் கருத்து வேற்றுமைகள் காணாமல் போய் என்றென்றும் ஒற்றுமை தழைக்க வேண்டும் என்பதற்காக அம்பிகை நமக்கு அருளியதுதான் இந்த கேதார கௌரி விரதம்.
ஆண்டு தோறும் ஐப்பசி மாத அமாவாசைக்கு 21 நாட்கள் முன்னதாக இந்த விரதத்தினைத் துவங்கி, சரியாக 21வது நாளான அமாவாசை அன்று முடிக்க வேண்டும்.
ஆனால் நடைமுறையில் பெரும்பாலான பெண்களுக்கு இது சாத்தியமில்லாத ஒன்றாகும். ஆகவே ஐப்பசி மாத அமாவாசையன்று (21 வது நாள்) நோம்பு (விரதம்) இருப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
திருமணம் ஆன தம்பதிகள் ஒன்றாக இணைந்து இந்த நோன்பு எடுக்க ஐப்பசி மாத அமாவாசை நாளன்று ஆலயத்திற்குச் செல்வதைக் காணலாம். கௌரி சமேத கேதாரீஸ்வரராக விளங்கும் அர்த்தநாரீஸ்வரரை நோக்கி மனமுருகி பிரார்த்தனை செய்வதே இந்த கேதார கௌரி விரதம்.
வெள்ளிக்கிழமைகள் தோறும் செய்ய வேண்டியவைகள் :
கணவன்-மனைவிக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்க நவகிரக சுக்கிரனுக்கு அகல்விளக்கில் கற்கண்டு போட்டு அதில் நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு காலை பொழுதில், இராகு காலத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து செவ்வரளி பூ சாற்றி அபிஷேகம் செய்து நெய்தீபம் ஏற்றி தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக அன்யோன்யமாக வாழ்வார்கள்.
சுக்ர ஓரையில் சிவப்பு அல்லது வெண்ணிற ஆடை அணிந்து விளக்கேற்றி ஸ்ரீதுர்கா தேவியை விளக்கில் எழுந்தருள வேண்டி நைவேத்தியமாக வெற்றிலை, பாக்கு, பழங்கள், பாயசம் வைத்து விரிப்பில் பன்னீர் தெளித்து வணங்கி வந்தால், அவரவர் கர்ம பலனைப் பொறுத்து சில நாட்கள் அல்லது சில வாரங்களில் தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.
ஆண்பாதி பெண்பாதியாக இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் இருக்கும் இறைவனை வழிபடுங்கள். பவுர்ணமி நாளில் விரதமிருந்து மாலையில் அர்த்தநாரீஸ்வரருக்கு பால்நிவேதனம் செய்து பருகி வாருங்கள். அர்த்தநாரீஸ்வரர் சன்னிதி இல்லாத ஊர்களில், சிவாலயத்துக்கு சென்று வழிபடுங்கள்.
மொத்ததில் கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் அதைப்போல ஆனந்தம் வேறில்லை. அதே நேரம் வெறுப்பு வளர்ந்து விட்டால் நிலைமை தலைகீழாகிவிடும். இந்த நேரத்தில், மற்றவர்களின் யோசனையைக் கேட்டு மனதைக் குழப்புவதை தவிர்க்க வேண்டும். கணவன், மனைவி விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே. பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை என்று அமைதியாக இறைவனை சரணடைவது ஒன்று தான் இதற்கு எளிய வழி.