Type Here to Get Search Results !

Translate

ஓங்கார தியானமும் பலன்களும் - தியான பயிற்சி

ஓங்கார தியானம்

ஓங்கார தியானம்
ஓங்கார தியானம்

உத்கீத பக்தியின் முக்கியப் பகுதி ஓங்காரம் அல்லது பிரணவ மந்திரம். ஓங்கார தியானம் மரணமிலாப் பெரு நிலையைத் தருகிறது, பயமற்ற நிலையைத் தருகிறது என்பதை ஒரு கதைபோல் கூறுகிறோம் இந்தப் பகுதியில். 

ஓங்காரமாகிய எழுத்தை உத்கீதமாகத் தியானிக்க வேண்டும். ஓம் என்ற உச்சாரணத்துடன்தான் உத்கீதம் பாடத் தொடங்கப் படுகிறது. எனவே ஓங்காரத்தின் விளக்கம் ஆரம்பிக்கிறது.

மரணத்தை எண்ணிப் பயந்த தேவர்கள் மூன்று வேதங்களையும் சரணடைந்தனர்; சந்தங்களால் தங்களை மறைத்துக்கொண்டனர். சந்தங்களால் மறைத்துக்கொண்டதால் சந்தங்கள் அந்தப் பெயரைப் பெற்றன.

தெளிந்த நீரில் நீந்துகின்ற மீன் எவ்வாறு நன்றாகத் தெரிகிறதோ, அவ்வாறே மூன்று வேதங்களிலும் மறைந்த தேவர்களை மரண தேவன் தெளிவாகக் கண்டான். அதனை உணர்ந்த தேவர்கள் மூன்று வேதங்களிலிருந்தும் வெளிவந்து ஓங்காரத்தில் புகுந்தனர்.

ரிக்வேத மந்திரங்களை அடைபவன் ஓம் என்று உச்சரிக்கிறான். சாம, யஜுர்வேத மந்திரங்களைக் கற்றவனும் ஓம் என்றே உச்சரிக் கிறான். ஓங்காரமே ஸ்வரம். அது அழிவற்றது, மரணமற்றது, பயமற்றது. அந்த ஓங்காரத்தில் சரணடைந்த தேவர்களும் மரண மற்றவர்களாக, பயமற்றவர்களாக ஆனார்கள்.

மந்திரத்தில் 'அடைவது' (ஆப்னோதி) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது சிந்திக்கத்தக்கது. அடைவது என்பது, ஒரு தகுந்த குருவிடமிருந்து ரிக்வேத மந்திர ஞானத் தைப் பெறுவது என்றாகிறது. வெறுமனே கற்பதால் அந்த ஞானம் வருவதில்லை. எனவே ரிக், யஜுர், சாமவேத மந்திர ஞானத்தைத் தகுந்த குருவிடமிருந்து பெற்றவன் அவற்றின் சாரம் ஓங்கார மந்திரம் என்பதை உணர்கிறான்.

ஓங்கார மந்திரம் இறைவனின் உண்மையான உருவமாகக் கொள்ளப்படுகிறது. ஓங்கார மந்திரத்தை உணர்பவன் இறைவனை உணர்கிறான்; அவர் அழிவற்ற, மரணமற்ற, பயமற்ற, மேலான பரம்பொருள் என்பதை உணர்கிறான். இறைவனை இத்தகைய அனுபூதியில் உணர்பவன் இறைநிலையை அடைகிறான் என்கிறது தைத்திரீய உபநிஷதில் சொல்கிறது.

இவ்வாறு ஓங்காரத்தில் சரணடைந்த, அதாவது இறை நிலையை அடைந்த தேவர்களும் மரணமற்றவர்களாக, பயமற்ற வர்களாக ஆனார்கள், அதாவது இறைநிலையை அடைந்தார்கள்.

யார் இந்த ஓங்கார மந்திரத்தை இவ்வாறு அழிவற்றதாக, மரணமற்றதாக, பயமற்றதாக அறிகிறானோ அவன் அதனைப் போற்றுகிறான்; அதில் சரணடைகிறான். அந்த மந்திரத்தைச் சரணடைந்த தேவர்கள் எவ்வாறு மரணமற்றவர்களாக ஆனார்களோ அவ்வாறே அவனும் மரணமற்றவனாக ஆகிறான்.

கதையும் கருத்தும்

இருள், தண்ணீர், திருடன் என்று பயத்திற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் அனைத்து பயங்களுக்கும் மூல காரணமாக இருப்பது மரணபயம். இறந்துவிடுவோம் என்ற பயமே மனிதன் பிற உயிரினங்கள் அல்லது சூழ்நிலைகளால் பயம் கொள்ளக் காரணமாகிறது.

அத்தகைய மரண பயத்தால் பீடிக்கப்பட்ட தேவர்கள் வேதங்களில் சரண்புகுந்தனர். ஆனால் அவர்களின் பயம் விலகவில்லை. சாஸ்திரங்களை எவ்வளவு கற்றாலும் அது மரண பயத்தைப் போக்குவதில்லை. பிரபஞ்சத்தின் அணுக்கள் தோறும் தனது வலையை விரித்து வைத்துள்ள மரணத்தின் பார்வையிலிருந்து அவர்கள் தப்ப இயலவில்லை. அதன்பிறகு தேவர்களுக்கு ஞானம் வந்தது; வெறுமனே சாஸ்திரங்களைக் கற்பதால் பயனில்லை என்று அவர்கள் உணர்ந்தார்கள்.

வேதங்களையும் உபநிஷதங்களையும் கற்கலாம் ; மேற்கோள் காட்டலாம். ஆனால் ஆன்மீக சாதனைகளின்றி இறையனுபூதி பெறுவது இயலாது. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தமது எளிய மொழியில், 'வேதங்கள் முதலிய பல சாஸ்திரங்கள் இருக்கின்றன. ஆனால் சாதனைகள் இல்லாமல், தவம் செய்யாமல் இறைவனை அடைய முடியாது..... சாஸ்திரங்களில் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன, உண்மைதான். இறையனுபூதி கிடைக்கவில்லை என்றால், அவரது பாதத்தாமரைகளில் பக்தி ஏற்படவில்லை என்றால், மனம் தூய்மையாக வில்லை என்றால், எல்லாம் வீண். இன்று இருபது ஆழாக்கு . மழை பெய்யும் என்று பஞ்சாங்கத்தில் எழுதியிருக்கிறது, அதற்காக பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் ஒரு துளிகூட நீர் கிடைக்காது. ஒரு துளியாவது விழ வேண்டுமே, ஆனால் விழாது' என்பார்.

எனவே, வெறும் சாஸ்திரப் படிப்பு பயனற்றது ; சாஸ்திரங்களின் சாரமான இறைவனை அடையாதவரை, இறையனுபூதி பெறாதவரை தாங்கள் மரண பயத்திலிருந்து விடுபட இயலாது என்பதைப் புரிந்து கொண்ட அவர்கள்  இறையனுபூதிக்கான சாதனையை மேற்கொண்டனர். அவர்கள் தேர்ந்தெடுத்தது ஓங்கார தியானம்.

இறைவனின் மிக மேலான சின்னம் ஓங்கார மந்திரம். அந்த ஓங்கார தியானத்தை மேற்கொண்டு அவர்கள் மரணமிலா வாழ்வைப் பெற்றனர்.

அவ்வாறு அடிப்படை உண்மைகளை உணர்ந்து, ஓங்கார தியானத்தை மேற்கொண்டு இறையனுபூதி பெறுபவர்களும் மரணமிலா வாழ்வைப் பெறுவார்கள் என்பது முக்தி அடைவதற்கான வழி ஆகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad