Type Here to Get Search Results !

Translate

பிராண சூரிய உத்கீத பன்முகத் தியானமும் பலன்களும் - தியான பயிற்சி

 பிராண சூரிய உத்கீத பன்முகத் தியானம்

பிராண சூரிய உத்கீத பன்முகத் தியானம்
 பிராண சூரிய உத்கீத பன்முகத் தியானம்


பிராணனையும் சூரியனையும் உத்கீதமாகத் தியானம் செய்வது பற்றி ஏற்கனவே கண்டோம் (#1:3.2). பிராணனை ஒரு தனி ஆற்றலாகவும், சூரியனை ஒரு தனி தேவனாகவும் தியானம் செய்வதுபற்றி அங்கே கூறப்பட்டது. இது கர்மாங்க தியானம். இத்தகைய தியானத்தால் தாம் ஒரு பிள்ளை மட்டுமே பெற்றதாகவும், அதே பிராணனையும் சூரியனையும் பன்முகமாகத் தியானித்தால் பல பிள்ளைப்பேறு கிடைக்கும் என்றும் கூறி இந்த பிராண - சூரிய - உத்கீத தியானத்தை கௌஷீதகி முனிவர் தமது மகனுக்குக் கற்பிக்கிறார். 

இப்போது பிராண-சூரிய-உத்கீத பன்முக தியானத்தை அறிந்து கொள்வோம்.

எது உத்கீதமோ அது பிரணவம். எது பிரணவமோ அது உத்கீதம். அங்கே தெரிகின்ற சூரியனே உத்கீதம், அவனே பிரணவம். ஏனெனில் ஓம் என்று உச்சரித்தவாறே அவன் சஞ்சரிக்கிறான்.

ஓம் எனும் பிரணவ மந்திரம், ஓங்காரம், ஸ்வரம், உத்கீதம் என்று பல பெயர்களில் வழங்கப்படுகிறது. பொதுவாக ரிக்வேதத்தில் பிரணவம் என்றும் சாமவேதத்தில் உத்கீதம் என் றும் அறியப்படுகிறது. இதனை இந்த மந்திரம் தெரிவிக்கிறது.

மேலும், சூரியனே உத்கீதம், சூரியனே பிரணவம் என்கிறது மந்திரம். அது எப்படி?

யாக கர்மங்களில் பல்வேறு கிரியைகளுக்கான அனுமதி 'ஓம்' என்ற சொல்லால் வழங்கப்படுகிறது. அதாவது, இன்ன கிரியையைச் செய்யலாமா என்று ஒரு புரோகிதர் தலைமைப் புரோகிதரைக் கேட்கும்போது அவர், 'ஓம்' என்று கூறி அனுமதி அளிக்கிறார். அதுபோல், சூரியனின்றி உலகின் செயல்பாடுகள் இல்லை; அதாவது, உலகின் செயல்கள் அனைத்தும் சூரிய னின் அனுமதியுடன் நடைபெறுகின்றன. அந்த அனுமதியை உலகிற்கு வழங்கியவாறே அவன்சஞ்சரிக்கிறான் என்பதை இந்த மந்திரம் ‘ஓம் என்று உச்சரித்தவாறே அவன் சஞ்சரிக்கிறான் என்று கூறுகிறது. இவ்வாறு சூரியன் உத்கீதமாகவும், பிரணவமாகவும் உள்ளான்.

கௌஷீதகி தன் மகனிடம் கூறினார்: ‘நான் சூரிய தேவனையே பாடினேன். எனவே நீ ஒருவன் மட்டுமே எனக்கு மகனாக இருக்கிறாய். நீ சூரிய தேவனின் கிரணங்களைத் தியானம் செய். உனக்குப் பல பிள்ளைகள் பிறப்பார்கள்', இது அதிதைவத தியானம்.

ஏற்கனவே கண்ட பிராண-சூரிய-உத்கீத தியானத்தில் சூரியன் ஒரு தனி தேவனாகக் கருதி தியானம் செய்யப்பட்டது. இத்தகைய தியானத்தையே தாம் மேற்கொண்டதாக கௌஷீதகி தெரிவிக்கிறார். ஒரு தேவனைத் தியானம் செய்ததால் ஒரு பிள்ளை மட்டுமே அவருக்கு வாய்த்தது. எனவே தன் மகனிடம், அதிக பிள்ளைப்பேறு வேண்டுமானால் சூரியனின் கிரணங்களைத் தியானம் செய்யுமாறு அவர் கூறுகிறார். கிரணங்கள் பல; பல கிரணங்களைத் தியானிப்பதால் பல பிள்ளைகள் வாய்க்கின்றன.

வேத காலத்தில் புத்திரப்பேறும் கால்நடைகளும் செல்வமாகக் கருதப்பட்டன. அதிக பிள்ளைகளும், அதிகக் கால்நடைகளும் ஒருவனது செல்வ வளத்தையும், சமுதாய அந்தஸ்தையும் காட்டுவதாகக் கருதப்பட்டன. எனவே வேதப் பிரார்த்தனைகளில் அதிக பிள்ளைகளும் அதிக கால்நடைகளும் வேண்டப்படுவதைக் காண்கிறோம்.

இப்போது அத்யாத்ம தியானம். வாயில் உறைகின்ற பிராணனை உத்கீதமாகத் தியானிக்க வேண்டும். ஏனெனில் அதுவே ஓம் என்று உச்சரித்தபடி சஞ்சரிக்கிறது.

எல்லா புலன்களும் மனமும் பிராணனின் துணையுட னேயே இயங்குகின்றன. பிராணன் இன்றி இயக்கங்கள் இல்லை. பிராணனின் அனுமதியுடனேயே உடம்பின் இயக் கங்கள் நடைபெறுகின்றன என்பதைக் குறிப்பிடவே பிராணன் ஓம் என்று உச்சரித்தபடி சஞ்சரிப்பதாக மந்திரம் கூறுகிறது.

முந்தைய தியானத்தில் சூரியன் ஓம் என்று உச்சரித்தபடி உலகின் இயக்கங்களுக்கு அனுமதி அளிப்பதாக தியானம் செய்யப்பட்டது. இங்கே பிராணன் ஓம் என்று உச்சரித்தபடி உடம்பின் இயக்கங்களுக்கு அனுமதி அளிப்பதாக தியானம் செய்யப்படுகிறது.

பலன்கள்

கௌஷீதகி தன் மகனிடம் கூறினார்: 'நான் வாயில் உறைகின்ற பிராணனைப் பாடினேன். எனவே நீ ஒருவன் மட்டுமே எனக்கு மகனாக இருக்கிறாய். நீ பல பிராணன்களைத் தியானம் செய். உனக்குப் பல பிள்ளைகள் பிறப்பார்கள்', இது அத்யாத்ம தியானம்.

பிராணனை ஒன்றாகக் கருதி, அதனை உத்கீதமாகத் தியானிப் பதன் பலன் ஒரு பிள்ளைப்பேறு. அதே பிராணனைப் பலவாகத் தியானம் செய்தால் பல பிள்ளைகள் பிறப்பார்கள் என்று இந்தத் தியானத்தின் பலன் கூறப்படுகிறது.

பிராணனைப் பலவாகத் தியானிப்பது என்றால் என்ன? 

பிராணன் உடம்பில் செயல்படுகின்ற தன்மைக்கு ஏற்ப பிராணன், அபானன் போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதாக ஏற்கனவே  கண்டோம். அவ்வாறு பிராணனின் பன்முகத் தன்மையைத் தியானிப்பதுபற்றி  கூறினோம்.

உத்கீத-பிரணவ ஐக்கிய தியானம்

எது உத்கீதமோ அது பிரணவம்; எது பிரணவமோ அது உத்கீதம் என்று தியானிக்க வேண்டும். ஹோத்ருவின் இருக்கையில் அமர்ந்து தவறாக உத்கீதம் இசைத்தாலும் அந்தத் தவறு இந்தத் தியானத்தால் மன்னிக்கப்படும்; இந்தத் தியானத்தால் மன்னிக்கப்படும்.

சாம கானத்தில் இசைக்கப்படுகின்ற உத்கீதமும் ஓங்காரமே; மற்ற வேதங்களில், குறிப்பாக ரிக்வேதத்தில் ஓதப் படுகின்ற பிரணவமும் ஓங்காரமே. இந்த ஐக்கியத் தன்மையைத் தியானம் செய்ய வேண்டும்.

இந்தத் தியானத்தின் பலன் என்ன?

உத்கீதத்தைத் தவறாக இசைக்க நேர்ந்தாலும் அந்தத் தவறு மன்னிக்கப்படும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad