உத்கீத தியானம் - ஓங்காரத்தின் மஹிமை
உத்கீத தியானம் - ஓங்காரத்தின் மஹிமை
ஓங்காரத்தை உச்சரித்தே வேத கர்மங்கள் தொடங்குகின்றன. ஓம் என்றே புரோகிதர் அழைக்கிறார்; ஓம் என்றே துதிக்கிறார்; ஓம் என்றே உச்சத்தில் பாடுகிறார். இவை எல்லாம் ஓங்கார தியானத்திற்காகவே. ஓங்காரத்தின் மகிமையுடனும் நைவேத்தியத்துடனும் வேத கர்மங்கள் தொடங்குகின்றன.
வேதங்கள் 'த்ரயீ' என்று அழைக்கப்படுகின்றன. த்ரயீ என்றால் மூன்று வேதங்கள். அதர்வண வேதம் காலத்தால் பிந்தியது என்று கருதப்படுவதால், பொதுவாக வேதங்கள் மூன்று என்றே கொள்ளப்படுகிறது.
வேத கர்மங்களில் புரோகிதர்கள் பலர் இருப்பார்கள். இவர்களில் ரிக்வேத புரோகிதர்கள் 'அத்வர்யு' எனப்படுகிறார்; யஜுர்வேத புரோகிதர் ‘ஹோதா'; சாமவேத புரோகிதர் 'உத்காதா' அல்லது 'உத்காத்ரு'; எல்லா வேதங்களையும் வேத கர்மங்களையும் அறிந்த புரோகிதர் 'ப்ரஹ்மா'. யாகங்களில் ஒவ்வொருவருக்கென்றும் குறித்த பணிகள் உள்ளன.
இந்த மந்திரத்தில் சோம யாகம் குறிப்பிடப்படுகிறது. இதில் அத்வர்யு, யாகத்திற்குரிய தேவர்களை அல்லது யாகத்தை நடத்துகின்ற மற்ற புரோகிதர்களை அழைக்கிறார். ஹோதா, தேவர்களுக்கான துதிகளைப் பாடுகிறார். உத்காதா, சாம கானத்தை இசைக்கிறார். இவையெல்லாம் ஓங்கார மந்திரத்துடனேயே ஆரம்பிக்கின்றன.
தேவர்களை அழைப்பதும் துதிகளைப் பாடுவதும் சாம கான இசையும் எல்லாம் ஓங்கார தியானத்திற்காகவே. ஏனெனில் பரம்பொருளின் மிக உயர்ந்த சின்னமாக ஓங்காரம் திகழ்கிறது. அந்த மகிமை காரணமாகவே வேத கர்மங்கள் அனைத்தும் ஓங்காரத்தை உச்சரித்து ஆரம்பிக்கின்றன.
இங்கே கூறப்படுகின்ற உத்கீத தியானம் கர்மாங்க தியான வகையைச் சேர்ந்தது. அதாவது, இந்த தியானம் சோம யாகம் என்ற யாக கர்மத்தின் அங்கமாக அல்லது பகுதியாகச் செய்யப் படுகிறது. யாகங்களில் பல்வேறு கர்மங்கள் இடம்பெறும். அவற்றில் ஒன்று இந்தத் தியானம். அதுபோலவே மற்றொன்று யாகத்தில் அளிக்கப்படுகின்ற ஆஹுதி அல்லது நைவேத்தியம். இந்த நைவேத்தியம் பார்லி, அரிசி போன்ற தானியங்களால் செய்யப்படுகிறது. இந்த ஆஹுதிகள் யாக அக்கினியில் அளிக்கப்படும்போதும் ஓங்காரம் உச்சரிக்கப்படுகிறது. அத னால்தான் ஓங்காரத்தின் மகிமையுடனும் நைவேத்தியத் துடனும் வேத கர்மங்கள் தொடங்குவதாக இந்த மந்திரம் கூறுகிறது.
ஓங்கார மந்திரத்தைப் பற்றிய இந்த அறிவு உடையவன், அது இல்லாதவன் ஆகிய இருவரும் உத்கீத தியானம் செய்கிறார்கள். இவர்கள் இருவரும் பெறுகின்ற பலன்கள் வெவ்வேறாகும். ஏனெனில் அறிவும் அறியாமையும் வேறானவை. எது அறிவுடனும் நம்பிக்கையுடனும் மன ஒருமைப்பாட்டுடனும் செய்யப்படுகிறதோ அது மிக மேலான பலனைத் தருகிறது. இதுவே ஓங்கார மந்திரத்தின் விளக்கம் ஆகும்.
அறிவுபூர்வமாகச் செய்வதற்குப் பலன் அதிகம் என்பதை இந்த மந்திரம் சுட்டிக்காட்டுகிறது. ஓங்காரம் என்றால் என்ன, அதை எப்படி தியானம் செய்வது, அந்த தியானத்தின் பலன் என்ன என்பவை போன்ற விஷயங்களைத் தெரிந்தவர்களும் தியானம் செய்கிறார்கள்; இவை தெரியாதவர்களும் தியானம் செய்யலாம். ஆனால் இரண்டிற்கும் பலனில் வேறுபாடு உள்ளது. அறிவின் துணையுடன் செய்யப்படுவதன் பலன் அதிகமானது.
எந்த ஒரு செயலிலிருந்தும் அதிக பலனைப் பெறுவதற்குத் தேவையான மூன்று நிபந்தனைகளை இந்த மந்திரம் கூறுகிறது. அவை அறிவு, நம்பிக்கை மற்றும் மன ஒருமைப்பாடு.
எந்தக் காரியத்தைச் செய்யப் போகிறோமோ அது பற்றிய அறிவு வேண்டும். அதுபோலவே, அந்தக் காரியத்தை என்னால் சாதிக்க இயலுமா இயலாதா என்பது பற்றிய அறிவும் வேண்டும். அதாவது நமது திறமையின் எல்லையை நாம் அறிந்திருக்க வேண்டும்.
இரண்டாவதாக, அந்தச் செயலைச் செய்து முடித்தால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பலன் நமக்குக் கிடைத்தே தீரும் என்பதில் நம்பிக்கை வேண்டும். அதுபோலவே, 'அந்தச் செயலைச் செய்து முடிப்பேன்' என்ற தன்னம்பிக்கையும் வேண்டும்.
மூன்றாவதாக, மேற்கண்ட இரண்டையும் வைத்துக் கொண்டு சோம்பியிருப்பதில் பயனில்லை; அந்தச் செயலைச் செய்து முடிக்க வேண்டும். ஒருமித்த மனத்துடன் அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.
இந்த மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றி எந்தச் செயலைச் செய்தாலும் அது மிக அதிக பலன் தரும்.
உத்கீத தியானம் முடிந்தது.