பிராண உத்கீத தியானங்கள்
![]() |
பிராண உத்கீத தியானங்கள் |
'சாதாரணமானதில் உயர்ந்ததை ஏற்றி வழிபடுவதே தியானம் அல்லது வித்யை' என்று நாம் அனைவரும் கண்டோம்.
சாதாரணமானது என்றால் நமது அறிவுக்கு எட்டியது. பிராணன், மனம், ஆகாசம் போன்றவை நாம் புரிந்துகொள்பவை. இவற்றின் பெருமையைக் கூறி, இவற்றை உத்கீதமாகத் தியானிக்கச் சொல்கிறது இந்தப் பதிவு. பிராணனின் 4 மகிமைகள் இந்தப் பகுதியில் நாம் அனைவரும் பார்க்க இருக்கிறோம்..
பிராணனின் மகிமை-1-(தூய்மையானது)
தூய்மை என்ற மகிமையுடன் கூடிய பிராணனை உத்கீதமாகத் தியானம் செய்வது பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம். இந்தத் தியானம் இங்கு ஒரு கதைபோல் கூறப்படுகிறது.
பிரஜாபதியின் வழிவந்தவர்களான தேவர்களும் அசுரர்களும் ஒருகாலத்தில் போரிட்டனர். 'உத்கீத தியானத்தால் அசுரர்களைத் தோற்கடிப்போம்' என்று தேவர்கள் உத்கீத தியானத்தில் ஈடுபட்டனர்.
தேவர்கள் மூச்சுடன் தொடர்புடைய மூக்குப்புலனை உத்கீதமாகத் தியானித்தனர். அப்போது அசுரர்கள் மூக்குப் புலனைத் தீமை யால் தாக்கினர். தீமையால் தாக்கப்பட்ட மூக்குப்புலன் நறுமணத்தையும் துர்நாற்றத்தையும் முகர்கிறது.
பிறகு தேவர்கள் வாக்குப்புலனை உத்கீதமாகத் தியானித்தனர். வாக்குப்புலனையும் அசுரர்கள் தீமையால் தாக்கினர். தீமையால் தாக்கப்பட்ட வாக்குப்புலன் உண்மை, பொய் ஆகிய இரண்டையும் பேசுகிறது.
பிறகு தேவர்கள் கண்புலனை உத்கீதமாகத் தியானித்தனர். கண்புலனையும் அசுரர்கள் தீமையால் தாக்கினர். தீமை யால் தாக்கப்பட்ட கண்புலன் காணத் தகுந்தவை, காணத் தகாதவை ஆகிய இரண்டையும் பார்க்கின்றன.
பிறகு தேவர்கள் செவிப்புலனை உத்கீதமாகத் தியானித்தனர். செவிப்புலனையும் அசுரர்கள் தீமையால் தாக்கினர். தீமையால் தாக்கப்பட்ட செவிப்புலன் கேட்கத் தக்கவை, கேட்கத் தகாதவை ஆகிய இரண்டையும் கேட்கின்றன.
பிறகு தேவர்கள் மனத்தை உத்கீதமாகத் தியானித்தனர். மனத்தையும் அகரர்கள் தீமையால் தாக்கினர். தீமையால் தாக்கப்பட்ட மனம் நினைக்கத் தக்கவை, நினைக்கத் தகாதவை ஆகிய இரண்டையும் நினைக்கின்றது.
பிறகு தேவர்கள் வாயில் உறைகின்ற பிராணனை உத்கீதமாகத் தியானித்தனர். அசுரர்கள் பிராணனையும் தீமையால் தாக்க வந்தனர். ஆனால் கடினமான பாறையைத் தாக்குகின்ற மண்கட்டி எவ்வாறு உடைந்து சிதறுகிறதோ அவ்வாறு அசுரர்கள் மாய்ந்தனர்.
கதையும் உள்ள கருத்து:-
ஞானேந்திரியங்களின் பிரதிநிதிகளான மூக்கு, கண் மற்றும் செவி; கர்மேந்திரியங்களின் பிரதிநிதியான வாக்கு; அந்தக்கரணமான மனம் ; பிராணன் ஆகியவைபற்றி கூறுவதால் இந்தத் தியானம் மனிதனைப்பற்றிய தியானம் (அத்யாத்ம தியானம்) என்ற பிரிவில் அடங்குகிறது. எனவே இங்கே கூறப்படுகின்ற தேவர்கள், அசுரர்கள், பிரஜாபதி போன்றோரைப் புற தேவதைகளாகக்' கருதக் கூடாது என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
மனிதனிலுள்ள நல்ல சக்திகளைத் தேவர்கள் என்றும், தீய சக்திகளை அசுரர்கள் என்றும், இரண்டிற்கும் இருப்பிடமான மனத்தை பிரஜாபதி என்றும் கொள்ள வேண்டும். மனிதனில் நல்ல மற்றும் தீய சக்திகளுக்கிடையே போராட்டம் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளது. இரண்டு சக்திகளும் போராடுவதால்தான் புலன்கள் இரண்டு பக்கங்களிலும் அதாவது நல்ல மற்றும் தீய பக்கங்களில் செயல்படுகின்றன. எனவே புலன்களும் மனமும் தூய்மை இழந்தவை.
ஆனால் பிராணனோ தீய சக்திகளால் பாதிக்கப்பட வில்லை. எனவே எப்போதும் தூய்மையாக இருக்கிறது. இந்தப் பிராணனின் இருப்பிடம் வாய் என்று கூறப்படுகிறது.” இவ்வாறு எப்போதும் தூய்மையாக இருக்கின்ற பிராணனை தியானிக்கச் சொல்கிறது இந்த வித்யை. எனினும் பிராண சக்தியை வளர்த்துக்கொள்வதன் முக்கியத் துவத்தை இந்த தியானம் கூறுவதாக நாம் அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.
உடலளவில், மனத்தளவில், ஆன்மீக விஷயங்களில் எந்தச் செயலில் ஈடுபட வேண்டுமானாலும் அதற்குப் பிராண சக்தி தேவை. தேவையற்ற செயல்களிலோ, பேச்சிலோ, சிந்தனைகளிலோ அதனை இழக்காமல் கட்டுப்படுத்தி ஓங்கார தியானத்தில் ஈடுபடுமாறு இந்த வித்யை, அதாவது, பிராண உத்கீத வித்யை கூறுவதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உத்கீத தியானத்தின் பலன்:-
கடினமான பாறையில் மோதுகின்ற மண்கட்டி எவ்வாறு உடையுமோ அவ்வாறே பிராண-உத்கீத தியானத்தைப் பழகுபவனுக்கு எதிராகத் தீமையை நினைப்பவனும், தியானம் பழகுபவனைத் தாக்குபவனும் அழிகிறார்கள்.
பிராண-உத்கீத தியானத்தைப் பழகுபவனை எதிரிகளால் எதுவும் செய்ய இயலாது என்பது இந்தத் தியானத்தின் பலன் ஆகும்.
முக்கியப் பிராணனுக்கு நறுமணமோ துர்நாற்றமோ இல்லை. ஏனெனில் ( மற்ற புலன்களைப்போல் ‘நான் பெரியவன்' என்ற ஆணவமின்றி ) அது தூய்மையாக இருக்கிறது. இது உண்பதும் பருகுவதும்கூட மற்ற புலன்கள் செயல்படுவதற்காகத்தான். மரணவேளையில் பிராணன் உண்பதோ பருகுவதோ இல்லை. (அதன் காரணமாக புலன்கள் செயலிழக்கின்றன;) அவை உடம்பைவிட்டுப் பிரிந்து செல்ல நேர்கிறது. (ஆனால் அவை தொடர்ந்து உடம்பிலேயே வாழ விரும்புகின்றன, உண்ணவும் பருகவும் விரும்புகின்றன, மரணத்தின்போதுகூட மனிதன்) வாயைத் திறந்தபடி இறக்கிறான். (மேலும் அவன் உண்ணவும் பருகவும் விரும்புவதையே இது காட்டுகிறது.)
உடம்பிலுள்ள தீய சக்திகள் பிராணனைத் தாக்க வந்து தோல்வியுற்றன. ஏனெனில் அது ஆணவமற்றதாக இருந்தது.
பிராணன் என்பது இயங்கு சக்தி. பிரபஞ்சத்தின் எல்லா இயக்கங்களும் பிராணனாலேயே நடைபெறுகின்றன. சூரியன், சந்திரன் போன்ற விண்கோள்களையும், நதி, கடல், காற்று என்று பூமியில் செயல்படுபவற்றையும் இயக்குகின்ற பிரபஞ்ச நிலையில் பிராணன் ‘பிராணன்' என்றே அழைக்கப்படுகிறது.
அதே பிராணன் புலன்களையும் மனத்தையும் இயக்கிய படி உடம்பினுள் செயல்படும்போது முக்கியப் பிராணன்' என்று பெயர் பெறுகிறது.' இந்த மந்திரம் முக்கியப் பிராணனின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது. ஞானேந்திரியங்கள், கர்மேந் திரியங்கள் மற்றும் மனம் ஆகிய அனைத்தும் இயங்குவதற் கான ஆற்றலை அளிப்பது பிராணன். இந்தப் பிராணன் உண விலிருந்து பெறப்படுகிறது. பட்டினி கிடக்க நேர்ந்தால் புலன்கள் செயலிழப்பதை நாம் காண்கிறோம்; உணவு உண்ணாததால் பிராணன் உற்பத்தியாகவில்லை; அதன் காரணமாக, புலன்கள் இயங்குவதற்கான பிராணன் அவற்றிற்குக் கிடைக்கவில்லை என்பது அதன் பொருள்.
பிராணன் தூய்மையானது; உடம்பு மற்றும் மனத்தின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது, மந்திரங்களில் உத்கீதம், அதாவது, ஓங்காரம் பரம்பொருளின் உண்மையான வடிவமாக இருப்பது. இந்த இரண்டையும் இணைத்து தியானம் செய்வது மிகமேலான பலனைத் தருவதாக இந்தப் பிராண உத்கீத தியானம் தெளிவாக சொல்கிறது.
அடுத்து
ஆங்கிரஸ் தியானம் - ( பிராணன் அங்கங்களின் சாரம் ) இதை பற்றி பார்ப்போம்.