உத்கீத தியானம் - பகுதி 2
(ஓங்காரம் ஆசைகளை நிறைவேற்றுவது வல்லது )
ரிக் எவை? சாமம் எவை? உத்கீதம் எவை? இவற்றின் விளக்கம் தொடர்கிறது.வாக்கே ரிக், பிராணன் சாமம், ஓங்காரமாகிய எழுத்து உத்கீதம். வாக்கு-பிராணன், ரிக்-சாமம் ஆகிய இரண்டும் ஜோடிகளாகக் கொள்ளப்படுகின்றன.
பிராணன் ஆற்றலைக் குறிக்கிறது. ஆற்றலுடன் வாக்கை உச்சரித்தே ரிக் மந்திரங்கள் ஓதப்படுகின்றன; சாம மந்திரம் இசைக்கப்படுகிறது. எனவே ரிக் மற்றும் சாம மந்திரங்கள், இணைந்தே செல்கின்ற ஜோடிகளாகக் கொள்ளப்பட்டன.
இந்த ஜோடி ஓங்காரத்துடன் இணைகிறது. ஜோடிகள் இணையும் போது அவர்களில் ஒருவர் மற்றவரின் ஆசையை நிறை வேற்றுகிறார்.
வாக்கு - பிராணன் மற்றும் ரிக் - சாமம் ஆகிய ஜோடி ஓங்காரத்துடன் இணைகிறது. வாக்கு-பிராணன் ஜோடி ஆற்றலைக் குறிக்கிறது; ரிக்-சாம் ஜோடி இசையைக் குறிக் கிறது. அதாவது, ரிக் மந்திரம் இசையுடன் சேரும்போது சாம மந்திரமாகிறது. அந்த சாம மந்திரம் ஆற்றலுடன் ஓங்காரமாக உச்சரிக்கப்படுகிறது. அப்படி உச்சரிக்கப்படும் ஓங்காரம் உச்சரிப்பவரின் ஆசைகளை நிறைவேற்றுகிறது.
உதாரணமாக ஆண்-பெண் ஜோடி காட்டப்படுகிறது. ஆணும் பெண்ணும் இணையும்போது எவ்வாறு ஒருவரின் ஆசையை மற்றவர் பூர்த்தி செய்கிறாரோ அவ்வாறு ஆற்றலுடனும் இசையுடனும் உச்சரிக்கப்படுகின்ற ஓங்காரம் உச்சரிப்பவரின் ஆசைகளை நிறைவேற்றுகிறது.
மேற்கண்டதுபோல் ஓங்காரத்தை உச்சரிப்பவனின் ஆசைகள் நிறைவேறுகின்றன என்பதை உணர்ந்து யார் ஓங்காரத்தை உத்கீதமாகத் தியானிக்கிறானோ அவனது ஆசைகள் நிச்சயமாக நிறைவேறுகின்றன.
ஆசைகளை நிறைவேற்றுகின்ற மந்திரமாக ஓங்காரத்தைத் தியானிக்கச் சொல்கின்றன. இது இரண்டாவது வகை உத்கீத தியானம் ஆகும்.
அடுத்த பதிவு:-
உத்கீத தியானம் 3 (ஓங்காரம் செல்வ வளத்தைத் தருவது எப்படி)