உத்கீத தியானம் என்பது என்ன?
- வேத காலத்தில் இன்றைய வழிபாட்டைப்போல் கோயில்களோ தெய்வங்களோ இல்லை. வேதங்களைப் படிப்பதும் சிந்திப்பதும் முக்கிய ஆன்மீக சாதனைகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. எனவே வேத மந்திரங்கள், சந்தம் முதலியவையும் தியானத்திற்கான பிரதீகமாக எடுத்துக்கொள்ளப்பட்டன.
- சாமவேதம் - 'ஸாமம்' என்றால் இசை. சாதாரண மந்திரம், குறிப்பாக ரிக்வேத மந்திரம் இசையுடன் சேரும்போது 'ஸாமம்' ஆகிறது. சாம மந்திரங்கள், அவற்றின் பொருளுக்கேற்ப பல தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, பாடப்படுகின்றன. இந்த ஒவ்வொரு தொகுதி யும் 'பக்தி' எனப்படுகிறது.
- இவற்றுள் ஒன்று உத்கீத பக்தி. உத்கீத பக்தியில் முக்கிய மான பகுதி ஓங்காரம். ஓங்காரம் உரத்த குரலில் (உத்) பாடப்படு கிறது (காயதி). உரத்த குரலில் இசைக்கப்படுகின்ற ஓங்காரம் உத்கீதம்.
- ஓம்' என்பது அ+உ+ம் என்ற மூன்று எழுத்துக்களாகப் பிரிகிறது. இந்த மூன்று எழுத்துக்களையும் சேர்த்து ஓங்காரம் மூன்று மாத்திரை அளவில் (நேரத்தில்) உச்சரிக்கப்படுகிறது. இசை சேரும் போது, அரை மாத்திரை சேர்ந்து, உத்கீதம் 3 1/2 மாத்திரை கால அளவில் உச்சரிக்கப்படுகிறது. இந்த 3 1/2 மாத்திரை அளவினதான ஓங்காரத்தை ஆலம்பனமாகக் கொண்டு தியானிப்பது உத்கீத தியானம்.
- சாமவேதத்தில் மட்டுமே ஓங்கார தியானம், உத்கீத தியானம் எனப்படுகிறது. இங்கே ஓங்காரத்தின் பொருள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை, அதன் ஓசையே கருத்தில் கொள்ளப்படுகிறது.
- ஓங்காரமாகிய எழுத்தை உத்கீதமாக இசைக்க வேண்டும். ஓம் என்பது உத்கீதமாக இசைக்கப்படுவதால் அது எப்படி பாடப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
- பரம்பொருளின் மிகச்சிறந்த பெயராகவும் விளக்கமாகவும் அமைவது ஓங்காரம். இறைவனின் வடிவங்களில் மிகவும் மகிமை வாய்ந்தது ஓங்காரம். ஓங்காரம் உச்சரிக்கப்படும்போது இறைவன் மகிழ்கிறார். இதனால்தான் எல்லா ஸ்தோத் திரங்களிலும், வேத பாராயணங்களிலும் ஆரம்பத்திலும் இறுதியிலும் ஓங்காரம் உச்சரிக்கப்படுகிறது. எனவே ஓங்காரத்தின் மகிமையை உணர்ந்துகொள்வது அவசியமாகிறது.
- இவ்வளவு மகிமை வாய்ந்ததாக இருப்பதால் இந்த ஓங்காரத்தை எப்படி இசைப்பது என்ற விளக்கம் ஆரம்பிக்கிறது.
- ஓங்காரத்தை உத்கீதமாக இசைப்பதன் விளக்கம் என்று வெறும் இசையை மட்டும் இங்கும் கூறவில்லை. அந்த இசையுடன் கலந்த தியானமும் குறிப்பிடப்படுகிறது.
- வாய் ஓங்காரத்தை உத்கீதமாக இசைக்கும்போது மனம் ஓங்கார தியானத்தில் ஈடுபட வேண்டும். தியானம் என்றால் இன்று நாம் கருது வது போன்ற உருவத் தியானம் அல்ல - ஓங்கார மந்திரத்தைத் தியானிப்ப தல்ல; ஓங்காரத்தைப் பரம்பொருளாகக் கருதி, பரம் பொருளின் தெய்வீகப் பண்புகளை ஆழ்ந்து சிந்திக்கின்ற தியானம் இது.
- இத்தகைய மூன்று பண்புகளைத் தியானிக்கின்ற மூன்று உத்கீத தியானங்கள் பற்றி பார்ப்போம்.