ராஜான தியானம் - (தேவதைகளைத் தியானித்தல்)
ஐந்து பக்திகளைக் கீழ்க்காணுமாறு தேவதைகளாகத் தியானிக்க வேண்டும்:
ஹிங்காரம் - அக்கினி தேவதை
பிரஸ்தாவம் - வாயு தேவதை
உத்கீதம் - ஆதித்ய தேவதை
பிரதிஹாரம் - நட்சத்திர தேவதை
நிதனம் - சந்திர தேவதை
இது ராஜான தியானம்; தேவதைகளுடன் தொடர்புடையது.
பலனும் நிபந்தனையும்
தேவதைகளுடன் தொடர்புடைய இந்த ராஜான தியானத்தை யார் அதன் அடிப்படையை அறிந்து செய்கிறானோ அவன் அந்தத் தேவதைகளுடன் அதே உலகில், அதே ஐஸ்வரியத்துடன் அவர் களைப்போல் வாழ்கிறான். அவன் முழு ஆயுளையும் பெற்று வாழ்கிறான்; பெருமையுடனும் நல்ல சந்ததியுடனும் கால்நடைச் செல்வத்துடனும் வாழ்கிறான்; பெருமை மிக்கவனாகவும் புகழுடனும் திகழ்கிறான்.
இந்தத் தியானம் செய்பவன் சான்றோர்களை நிந்திக்கக் கூடாது. இது நிபந்தனை.
பொதுவாக எது தியானம் செய்யப்படுகிறதோ, அதனை நிந்திக்கக் கூடாது என்பது நிபந்தனையாக இருப்பதை இதற்கு முந்தின தியானம் வரை கண்டோம். இது 'தேவதை' பற்றிய தியானம்; எனவே தேவதைகளை நிந்திக்கக் கூடாது என்ற நிபந்தனை இருந்திருக்க வேண்டும். ஆனால் 'சான்றோர்களை நிந்திக்கக் கூடாது என்பது நிபந்தனையாகத் தரப்பட்டுள்ளது. இதனை, ‘சான்றோர்கள் கண்கண்ட தெய்வங்கள்' என்ற வேத வாக்கியத்தை மேற்கோள் காட்டி, சான்றோர்களுக்குச் செய் கின்ற வழிபாடு தெய்வங்களுக்குச் செய்வதே, அதுபோலவே, சான்றோர்களை நிந்திப்பது தெய்வங்களை நிந்திப்பதே என்று விளக்குகிறார் ஸ்ரீசங்கரர்.