வசதியான கணவர் அமையும் யோகம்
ஜோதிட சாஸ்திரத்தில் ஆன்றோர்கள், ஏழாமிடத்தையும் மற்றும் எட்டாமிடத்தையும், களத்திர ஸ்தானம், மாங்கல்ய ஸ்தானம் என நிர்ணயித்துள்ளனர்.
அதுபோல ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2-ஆம் இடமானது குடும்ப ஸ்தானத்தை குறிக்கிறது. மேலும் ஜாதகத்தில் 2 மற்றும் 7 ஆகிய இடங்களைப் பொறுத்தே ஒரு பெண்ணுக்கு வரக்கூடிய கணவர் எப்படிப்பட்டவர் என்று நிர்ணயம் செய்ய முடியும். குருபலமானது திருமணத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று ஆகும்.
ஒரு பெண்ணுக்கு ஜாதகத்தில் 2,5,7,9,11 ஆகிய வீடுகளில் குரு கோசார ரீதியாக வரும் போது திருமணம் நடைபெறுகிறது. ஆனால் எல்லோருக்கும் இந்த அமைப்பு ஏற்படுவதில்லை.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2,7-ல் சுபகிரகம் வீற்றிருக்கும் போது 7-ஆம் அதிபதி உச்சம் பெற்று காணப்பட்டால், அந்த பெண்ணுக்கு அமையும் கணவன் நல்ல வசதி படைத்தவனாக இருப்பான்.
ஏழாம் அதிபதி லாபம் பெற்று 11-ஆம் வீட்டில் காணப்பட்டால் அந்த பெண்ணுக்கு அமையக்கூடிய கணவன் செல்வந்தராகவும், அரசாங்கத்தில் உயர்ந்த பதவி வகிப்பவராகவும் திகழ்வார்.
ஏழாம் அதிபதி ஏழாம் வீட்டை பார்வை செய்தாலும் அழகான, வசதியான நல்ல குணம் வாய்ந்த கணவர் அமையும் யோகம் உண்டாகும்.
ஒரு பெண்ணுக்கு ஏழாம் அதிபதி 6,8,12-ல் அமையப் பெற்றால் திருமணம் தாமதமாக நடைபெறும். அதுபோல ஏழாம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவிகள் இருக்கும் எனில் அந்த பெண்ணின் கணவர் வசதி வாய்ப்பில் பின்தங்கியவராக இருப்பார், மனைவியுடன் கருத்து வேறுபாடு உள்ள கணவராகவும் வருவார்.
பெண்ணின் ஜாதகத்தில் ஏழாமிடம் புதன் அமையப்பெற்றால் அந்த பெண்ணுக்கு தன்னுடைய அத்தை மகனை கைபிடிக்கும் யோகம் ஏற்படும்.
ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நான்கில் காணப்பட்டால் அந்த பெண்ணுக்கு கணவர் தனது தாய்வழி உறவில் அமையக்கூடும். திருமணத்திற்கு பிறகு பூமி, வீடு, வாகனம் யாவும் அமையப்பெறும்.
ஏழாம் அதிபதி ஐந்தில் இருந்தால், அவர்களுக்கு காதல் திருமணமோ அல்லது கலப்புத் திருமணமோ நடக்க வாய்ப்பு உள்ளது.
ஏழாம் அதிபதி ஆறில் அமையப்பெற்றால் மாமன் வழி உறவில் மணாளன் அமையும் யோகம் உண்டாகிறது.
ஏழாம் அதிபதி ஏழில் அமையும் பெண்ணுக்கு அந்த பெண்ணின் உறவுகளில் ஒருவரை மணந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
ஏழாம் அதிபதி எட்டாம் வீட்டில் காணப்பட்டால், உறவினர் வழியில் வரன் அமையாது. திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியிடயே கருத்து வேறுபாடு உண்டாக வாய்ப்பிருக்கிறது.
ஏழாம் அதிபதி ஒன்பதில் காணப்பட்டால் அயல்நாடு, வெளிமாநிலம், வெளியூர் போன்ற இடங்களிலிருந்து கணவர் வருவார். திருமணத்துக்குப் பிறகு செல்வம் செல்வாக்கு மேலும் மேலும் அதிகரிக்கும்.
ஏழாம் அதிபதி பத்தில் இருந்தால் தந்தை வழி உறவில் கணவர் அமைவார். திருமணத்துக்குப் பிறகு தொழில் பொருளாதார நிலையாவும் சிறப்பாக இருக்கும்.
ஏழாம் அதிபதி பதினொன்றில் இருந்தால் அறிமுகமான குடும்பத்தில் இருந்து கணவன் அமைவார். அவர் உயர்ந்த உத்தியோகத்தில் பணியாற்றுவார்.
ஏழாம் அதிபதி பனிரெண்டில் இருந்தால் உறவினர் வழியில் கணவர் அமையாது.