செவ்வாயால் ஏற்படும் நோய்கள்...!
ஜோதிட ரீதியாக செவ்வாயைப் பற்றி ஆராயும்போது செவ்வாயின் நிறம் சிவப்பாக உள்ளதாகவும், செவ்வாய் ஆண் கிரகமாகவும் கருதப்படுகிறது. செவ்வாய்க்கு தெற்கு திசை யோக திசையாகும். சூரியன் சந்திரனைப் போல் நவகிரகங்களில் செவ்வாயும் ஒரு முக்கியமான கிரகமாகும். பெண்களுக்கு களத்திர காரகனாய் விளங்குபவர் செவ்வாய். செவ்வாய்க்கு பூமிகாரகன், அங்காரகன், மங்களகாரகன், சகோதரகாரகன், காமாதிபதி என பல பெயர்கள் உண்டு. நவகிரகங்களில் செவ்வாய் அங்காரகன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். சனி, ராகு, கேதுவிற்கு அடுத்தபடியாக அசுப கிரகங்களில் ஒருவராக சித்திரிக்கப்படுகிறார்.
செவ்வாய் கிரகம் ரத்தத்திற்கும், விபத்திற்கும் உரியது. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய், சனி பார்வை பெற்றிருந்தாலும், செவ்வாய், சனி சேர்க்கை பெற்றிருந்தாலும் அவருக்கு அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட ஜாதகர் தாமாகவே முன்வந்து ரத்ததானம் செய்யலாம்.
காயம் :
ஒருவரின் உடலில் வெட்டுக்காயங்கள், தீயால் புண், அம்மை, குடல் புண், இரத்த அழுத்தம், ஜூரம், முதலியவை ஏற்படுகின்றதென்றால் அதற்குக் காரணம் செவ்வாயே ஆவார்.
சகோதரம் :
ஒருவர் தம்பிகளுடன் பெரும்படையாகத் தோன்றி வாழ வேண்டுமெனில் அதற்கு செவ்வாயின் அனுக்கிரகம் இருக்க வேண்டும். இவர் சகோதர பாக்கியத்திற்கு காரணமாக இருப்பதால் சகோதர காரகன் என்பர்.
பூமிக்காரகன் :
இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய விளை நிலங்களுடன் பூமி ஆளும் நில ஜமீன்தார்களாக விளங்க வேண்டுமெனில், அங்காரகனின் ஆதிக்கம் மேலோங்கி இருக்க வேண்டும். எனவே, இவரை பூமிக்காரகன் என அழைப்பர்.
தொழிற்சாலை :
எலக்ட்ரிக், இரசாயனம், கனிமம் சம்பந்தப்பட்ட பொறியியல் சம்பந்தப்பட்ட தொழிற்கூடங்கள் வைத்து நடத்த பெரும் பொருள் லாபம் பெற செவ்வாயே காரணமாவார்.
செவ்வாயால் உண்டாகும் நோய்கள் :
அம்மை, கண்களில் பாதிப்பு, குடல் புண், காக்காய் வலிப்பு, இருதய பாதிப்பு, உஷ்ண நோய், தோல் நோய், எதிரி மற்றும் உடன்பிறப்புகளிடம் சண்டையிடும் நிலை, தொழுநோய், தோல் நோய் போன்றவை உண்டாகும்.
செவ்வாயின் அருள் பெற :
சஷ்டி விரதம், கிருத்திகை விரதம், சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கலாம்.