Type Here to Get Search Results !

Translate

சூரிய கிரகத்தின் பலன்களும் தசாபுக்தியும்

சூரிய கிரகத்தின் பலன்களும் தசாபுக்தியும்
 

சூரிய கிரகத்தின் பலன்களும் தசாபுக்தியும் 

சூரியனின் 12 நாமங்கள் மித்ரா,ரவி,சூர்யா,பானு,கசா,பூஷன்,ஹிரண்யகர்ப்ப,மரீசி,ஆதித்ய சவித்ரு,அர்க்க,பாஸ்கர

சூரியன்தான் SUN ஆட்சியாளர்களை உருவாக்குபவன். சூரியனின் அருளின்றி எவரும் அரசியலிலோ அல்லது ஆட்சிக்கோ வரமுடியாது. சூரியனை இயற்கையிலேயே ஒரு தீயகிரகம் (natural malefic) என்று வேதங்கள் வர்ணிக்கின்றன. அதனால்தானோ என்னவோ அரசியல் வாதிகளிலும் பலர் தீயவர்களாகி விடுகிறார்கள் ஜாதகனுக்கு வலிமையையும், எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவன் சூரியனே. நம் உடல் அமைப்புக்கு அவன்தான் காரகன், சூரியனை வைத்துத்தான், சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாளைத்தான் நாம் ஞாயிற்றுக் கிழமை என்கிறோம்.

பூமியின் சுழற்சியினால் இரவு பகல் நமக்குக் கிடைப்பதற்குக் காரணம் சூரியனே. 

1. ஜாதகனுக்கு வாளிப்பான அல்லது வலிமையான அல்லது ஆரோக்கியமான உடம்பு அமைவதற்குக் காரணம் சூரியனே. சூரியன்தான் உடல்காரகன்

2. சூரியன் கேந்திர திரிகோணங்களில் அமர்ந்திருந்தால், சுயவர்க்கத்தில் 5ம் அல்லது அத்ற்கும் மேற்பட்ட பரல்களையும் கொண்டிருந்தால் ஜாதகனுக்கு நல்ல உடல் அமைப்பு இருக்கும். நமக்கு எதையும் சினிமாவை வைத்துச் சொன்னால் எளிதில் புரியும். ஆகவே அதன் பலனை இப்படிச்சொல்லலாம். சூரியன் நன்றாக இருந்தால், ஜாதகனுக்கு அரவிந்தசாமி, அல்லது அஜீத் குமார் அல்லது சூர்யா அல்லது அப்பாஸ் அல்லது மமுமுட்டி போன்றவர்களின் வசீகரமான உடல் அமைப்பு இருக்கும் இல்லையென்றால் ஜாதகன் ஓமக்குச்சி நரசிம்மன்தான்

3. ஜாதகத்தில் சூரியன் தீயவர்களின் வீட்டில் அல்லது சேர்க்கையில் அல்லது பார்வையில் இருந்தால் ஜாதகனுக்கு நோய்கள் இருக்கும் அல்லது உண்டாகும் சூரியன் ஆறு, எட்டு, அல்லது பன்னிரெண்டு ஆகிய வீடுகளில் அமர்ந்து இருந்தாலும் அதே பலன்தான். இந்த அமைப்பில் சுபக்கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தால் அது விதிவிலக்கைக் கொடுக்கும்!

4. ஜாதகத்தில் சனியும் சூரியனும் சேர்ந்திருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர் நேராகப் பார்த்தாலும், ஜாதகனுக்கு ஊனம் அல்லது உடற் குறைபாடுகள் உண்டாகும் அல்லது ஏற்படும்.

5. சூரியன்தான் தந்தைக்கும் அதிபதி. சூரியன் நன்றாக இருந்தால் நல்ல தந்தை கிடைப்பார். இல்லையென்றால் இல்லை

6. ஜாதகத்தில் சூரியன் கெட்டிருந்தால், ஒரு சப்பையான தந்தை அல்லது ஒரு உதவாக்கரைத் தந்தை கிடைப்பார்.(He will be useless or hopeless)

7. சூரியன் கெட்டிருந்தால் அல்லது மறைந்திருந்தால், சிலர் தங்களுடைய சின்ன வயதிலேயே தந்தையை இழக்க நேரிடும். இது இளம் வயதுக் குழந்தைகளுக்கு ஒரு சோகமான சூழ்நிலையைக் கொடுக்கும் "அன்னையோடு அறுசுவைபோம். தந்தையோடு கல்விபோம்" என்பது முதுமொழி. அன்னை கையால் உண்ணும் உணவுதான் அறுசுவையாக இருக்கும் என்பார்கள். அன்னை போய்விட்டால் மகனுக்கு நல்ல சுவையான உணவு கிடைக்காது என்று இதற்குப் பொருள். இது பெண் குழந்தை களுக்கும் பொருந்தும் (தங்கமணிகள் வந்து சமையலைக் கற்றுக் கொண்டு, நமக்கு சுவையான உணவைக் கொடுப்பதற்குள் ஒன்று நமக்கு வயசாகிவிடும் அல்லது மேலே சிறகில்லாமல் சென்றிருப்போம்)

8. சூரியனுடன் பத்துப் பாகைக்குள் வரும் மற்ற கிரகங்கள் அஸ்தமனமாகி விடும் ஆதலால் சூரியன் தனித்து இருப்பது நல்லது இதை வைத்துத்தான் அமாவாசையில் பிறப்பவன் அவதிப்படுவான் என்பார்கள். அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் நெருங்கி ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கட்டில் ஜாதகனுடைய சந்திரன் அவுட்டாகி விடுவார். அதாவது அஸ்தமனம் ஆகி விடுவார். அதானால் ஜாதகனுக்கு வாழ்க்கையில் பெரிய பெரிய அவஸ்தைகள் வந்து கொண்டே இருக்கும். அதிலும் ஒரு நன்மை உண்டு. ஜாதகன் ஐம்பது வயதிற்குமேல் ஞாநியாகிவிடுவான்.

9. சூரியன் நீசமாகி, சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெறாமல் சுய வர்கத்தில் 2 அல்லது அதற்குக் குறைவான பரல்களை பெற்றிருக்கும் ஜாதகனின் உடம்பு பலமின்றி (weak) இருக்கும். நோஞ்சானாக இருப்பான் அல்லது நித்திய சீக்காளியாக இருப்பான்.

10. உச்சமான சூரியன், சுபக்கிரகத்தின் பார்வை பெற்ற சூரியன்,சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேல் பெற்ற சூரியன் ஆகிய அமைப்புக்கள் உடைய ஜாதகன் டக்கராக் இருப்பான். வெற்றி மீது வெற்றி வந்து அவனைச் சேரும்.

சூரியனுக்கும் பன்னிரெண்டு ராசிகளுக்கும் உள்ள தொடர்பு சூரியனுக்குச் சொந்த வீடு: ஒன்று மட்டுமே: அது சிம்மம் சூரியனுக்குச் நட்பு வீடுகள்: மூன்று = விருச்சிகம், தனுசு, மீனம் சூரியனுக்குச் சம வீடுகள்: மூன்று = கன்னி, மிதுனம், கடகம் சூரியனுக்குச் பகை வீடுகள்: மகரம், கும்பம், ரிஷபம் சூரியனுக்குச் உச்ச வீடு: மேஷம் சூரியனுக்குச் நீச வீடு: துலாம் சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சூரியனுக்கு 100% வலிமை இருக்கும். சூரியனுடன் பதன் சேர்ந்திருந்தால் ஆதித்ய யோகம் அந்த யோகத்திற்குப் பலன்கள்: ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். எல்லா வேலைகளிலும் கெட்டிகாரனாக இருப்பான். மதிப்பும் மரியாதையும் உடையவனாக இருப்பான் அல்லது அவைகள் அவனுக்குக் கிடைக்கும் அல்லது தேடிவரும். வசதிகளும் மகிழ்ச்சியும் கொண்டவனாக இருப்பான் சூரியனுடன் சனி சேரக்கூடாது. அல்லது ஒருவர் பார்வையில் ஒருவர் இருக்கக்கூடாது. உடல் நோய்கள், உடல் உபாதைகள் உடல் ஊனங்கள் ஏற்படும் அபாயம் உண்டு சம வீட்டில் இருக்கும் சூரியனுக்கு 75% பலன் உண்டு! (என்ன இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?) நட்பு வீட்டில் இருக்கும் சூரியனுக்கு 90% பலன் உண்டு. பகை வீட்டில் இருக்கும் சூரியனுக்கு 50% பலன் மட்டுமே உண்டு நீசமடைந்த சூரியனுக்கு பலன் எதுவும் இல்லை உச்சமடைந்த சூரியனுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு! இந்த அளவுகளையெல்லாம் நான் எடை போட்டுச் சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன். அதை மனதில் கொள்க!

சூரியன் கொண்டிருக்கும் சுயவர்க்கப்பரல்களுக்கான் பலன்கள்: சுயவர்க்கத்தில் சூரியன் கொண்டிருக்கும் பரல்களை வைத்துப் பலன்கள்: எல்லாம் பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம். அதையும் மனதில் கொள்க! 1 பரல்: உடல் உபாதைகள், துக்கம், அலைச்சல் 2 பரல்கள்: மகிழ்வின்மை, தனநஷ்டம், அரசுபகை, புரிதலின்மை (misunderstanding) 3 பரல்கள்: அவதிகொடுக்கும் உடல் நிலை, அலைச்சல் மிகுந்த பயணங்கள் உடல் காரணமாக மனதிற்கும் வேதனைகள் 4 பரல்கள்: சம அளவில் லாபம், நஷ்டம், மகிழ்ச்சி, துக்கம் கலந்த வாழ்வு. 5 பரல்கள் செல்வாக்கு உள்ளவர்களின் நட்பு, கல்வியால் மேன்மையடைதல் 6 பரல்கள்: ஆரோக்கியமான உடல் நிலை. வசீகரமான தோற்றம், சாதிக்கும் மனப்பான்மை. வண்டி வாகன சேர்க்கைகள். முறையான வழியில் அதிர்ஷ்டம் மற்றும் புகழ். 7 பரல்கள்: வாழ்க்கையின் உச்சங்களைக் காணும் பாக்கியம். உரிய விருதுகள் கிடைக்கும் வாழ்க்கை 8 பரல்கள்: அரசியல் செல்வாக்கு, அதிகாரம், மரியாதை எல்லாம் கிடைக்கும் அல்லது அப்படிப் பட்டவர்களின் தொடர்பு கிடைக்கும். சிலருக்கு உலக அளவில் அறியப்படும் வாய்ப்பும் உண்டாகும் (universal respect)

சூரியன் இருக்கும் 12 ராசிகளுக்குகான பலன்கள்

1 லக்கினத்தில் சூரியன் இருந்தால்: ஜாதகன் கோபக்காரன். சிலருக்கு சோம்பலும் சேர்ந்து இருக்கும். அதீத துணிச்சல் உடையவனாக இருப்பான் சிலருக்கு இளம் வயதிலெயே தலை வழுக்கையகிவிடும். தங்களைப் பற்றிய உயர்வு மனப்பானமை இருக்கும். இரக்கசிந்தனை இருக்காது. பொறுமையுணர்வும் இருக்காது. மேஷ லக்கினத்தில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் உயர்கல்வி பெற்றவர்களாக இருப்பார்கள். செல்வந்தவர்களாவும், தனித்தன்மை உடையவர்களாகவும், புகழ் பெற்றும் விளங்குவார்கள். கடகத்தை லக்கினமாகக் கொண்டு அதில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் கண்பார்வைக் கோளாறுகள் ஏற்பட்டு அவதிப்படுவார்கள். துலாம் வீடு லக்கினமாக இருந்து அங்கே சூரியன் நிலை கொண்டிருந்தால், ஜாதகன் வறுமை மற்றும் துன்பத்தால் அவதியுறுவான். அதே லக்கினத்தில் பிறந்த பெண்ணிற்குக் கருத்தரிப்பதில் பிரச்சினை உண்டாகும் மேற்கூறிய இடங்களைச் சுபக் கிரகங்கள் பார்த்தால், தீய பலன்கள் வெகுவாகக் குறைந்துவிடும். நல்ல பலன்கள் அதிகமாகும்

2 லக்கினத்திற்கு இரண்டாம் வீட்டில் சூரியன் இருந்தால்: சொத்துக்கள் இருக்காது அல்லது கிடைக்காது. அதே போலக் கல்வியும் கிடைக்காமல் போய்விடும்.. பெருந்தன்மை உடையவனாக ஜாதகன் இருப்பான். எதிரிகளையும் நேசிப்பான். சிலருக்கு அரசு பகை உண்டாகலாம். இரண்டாம் வீட்டில் எந்த தீய கிரகம் இருந்தாலும், அது ஜாதகனின் சொத்து சுகங்களுக்கு எதிராகத்தான் இருக்கும். எதிராகத்தான் வேலை செய்யும்.

3. லக்கினத்திற்கு மூன்றாம் வீட்டில் சூரியன் இருந்தால்: ஜாதகன் வசீகரமானவனாக இருப்பான்.(the quality of being good looking and attractive) தியாக மனப்பான்மை உடையவனாக இருப்பான். யுத்தத்தில் எதிரிகளை வதம் செய்பவனாக இருப்பான். அதீத துணிச்சல் இருக்கும். உடல் உறுதியுடையவனாக இருப்பான். இந்த அமைப்பு (அதாவது லக்கினத்திற்கு மூன்றாம் வீட்டில் சூரியன்) இளைய சகோதர உறவுகளுக்கு எதிரானது. உறவுகள் ஜாதகனை விட்டு விலகும்

சூரியனின் கோச்சார பலன்கள்: சூரியன் ஒரு வருடத்திற்குள் ஒரு சுற்று சுற்றி முடிக்கக்கூடியவர். ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் மட்டுமே இருக்கக் கூடியவர் 3, 6, 11 ஆகிய வீடுகளில் சஞ்சாரம் செய்யும் அந்த 3 மாதகாலம் மட்டுமே ஜாதகனுக்குக் கோச்சார சூரியனால் நன்மைகள் ஏற்படும் மற்ற 9 மாத காலத்தில் கோச்சார சூரியனால் நன்மைகள் ஏற்பட வழியில்லை கோச்சார சூரியன் தான் சுற்றிவரும் பாதையில் ஜாதகனின் சுயவர்க்கத்தில் தன்னுடைய கட்டத்தில் எந்த இடத்தில் ஜீரோ பரல்களுடன் இருக்கிறாரோ அந்த இடத்திற்கு வரும் மாதத்தில் ஜாதகனுக்கு நோய் நொடிகளை அல்லது தன் நஷ்டங்களைக் கொடுப்பார், 


சூரியதசை தசை

சூரியதசை தசையின் போது, தடைகளை அகற்றுவதன் மூலமும், உயிர்க்கொலை செய்வதன் மூலமும், இரக்கமில்லாக் காரியங்கள் செய்வதன் மூலமும் கூட பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். புகழையும், சந்தோஷத்தையும், குடும்பநலனையும் பெறுவீர்கள். மிருகங்களினாலோ அல்லது தீயினாலோ உண்டாகக் கூடிய சில கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். குறிப்பாக இந்தக் காலத்தில் கண்கள், வயிறு, பற்கள் இவை ஆரோக்கியம் குறைந்தவைகளாக இருக்கும். குடும்பத்தைப் பற்றி விசேஷமான கவனம் செலுத்துமாறு ஆலோசனை கூறப்படுகிறது. பெற்றோர்கள், மூத்தவர்கள், பிற முக்கியமானவர்கள் ஆகியவர்களிடமிருந்து, பிரியக்கூடிய அறிகுறிகள் உள்ளன. இந்த ஆதித்யன் தனது காலத்தில், தங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களினால் கஷ்டங்கள் உண்டாக்குவதுடன் கடுமையான பொருளாதார நெருக்கடிகளையும் உண்டாக்கலாம். கிரஹநிலையில் சூரியன் வர்க்கபலத்துடன் காணப்படுவதால், இந்த தசை பொதுவாக நல்ல காலமாகும். இந்தக் காலத்தில் தாங்கள் மனம் சம்பந்தப்பட்ட வகையிலும், ஆன்மா சம்பந்தப் பட்ட வகையிலும் நல்ல பலத்தை உடையவராக இருப்பதை உணர்வீர்கள். மிக அதிக அளவில் பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். உங்கள் தகப்பனார் வாழ்வில் உயர்வடைவார். எனவே தங்களது பெற்றோரிடமிருந்து நல்ல லாபங்களை அடைவீர்கள். தங்களுடைய உத்தியோக நிலை, அந்தஸ்து ஆகியவற்றில் முன்னேற்றமுண்டாகும். தாங்கள் உடல் வ−மையையும், மனோவ−மையையும் பெற்றிருப்பீர்கள். மரக்கட்டைகள், துணிகள், மருந்துப்பொருட்கள் போன்றவற்றோடு தொடர்புடைய வியாபார நடவடிக்கைகள் தங்களுக்கு நன்மைபயக்கக் கூடியதாகயிருக்கும்.

ஆதிக்கத்திற்கும், அதிகாரத்திற்கும் உரிய கோளான சூரியன், ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். நன்றாக இருந்தால் மட்டும் போதுமா? இல்லை!, கோள்களில் நம்பர் ஒன் சுபக்கிரகமான குருவின் ஆசீர்வாதத்தையும் - அதாவது பார்வையையும் அவர் பெற்றிருக்க வேண்டும்! சூரியன், புதன் மற்றும் சனி ஆகிய மூன்று கோள்களின் கூட்டணி, ஜாதகனைக் கொண்டுபோய் மந்திரியாக உட்கார வைக்கும்!

1. சூரியன் தசை 
உங்களில் பலருக்கு ஜாதகமேயிருக்காது. உங்களுக்கு ஜாதகம் இல்லாவிட்டலும் பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் தெரியாவிட்டாலும் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேனா? இல்லையா? என்று தெரிந்து கொண்டு தகுந்த பரிகாரங்களையும் செய்து கொள்ளலாம்.கடவுள் பிரதமர்! நவக்கிரகங்களே மந்திரிகள்!!ஒரு பிரதமர் எப்படி மந்திரிகளுக்கு இலாகாக்களைப் பிரித்துக் கொடுக்கிறாரோ அதேபோல் கடவுளும் எங்களுக்கு (நவகிரகங்களுக்கு) இலாக்காக்களைப் பிரித்துக் கொடுத்துள்ளார். நாங்கள் எங்கள் இலாகாவின் கீழ் வரும் விஷயங்கள், விவகாரங்களில் அதிகாரம் செலுத்துகிறோம். நாங்கள் உங்கள் ஜாதகத்தில் நன்மை செய்யும் நிலையிலிருந்தால் நன்மை செய்கிறோம், தீமை செய்யும் நிலையிலிருந்தால் தீமை செய்கிறோம்.நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல இடத்தில் உட்கார்ந்து நன்மை செய்யும் நிலையிலிருந்தால், அதிகாரம் செலுத்தும் விஷயங்களையெல்லாம் வாரி வழங்கிடுவேன். கிழக்குத்திசை, மாணிக்கக்கல், தானம்-கடிகாரம், ஆத்மா-தந்தை, தந்தையுடன் உறவு, தந்தைவழி உறவு, தன்னம்பிக்கை இதற்கெல்லாம் நானே அதிகாரி. பல், எலும்பு, முதுகெலும்பு, வலதுகண், மலைப் பிரதேசங்கள், தலைமைப் பண்புகள், மேற்பார்வை, தாமரைமலர், விளம்பரங்கள், நாளிதழ்கள் இவை யாவும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே! பித்தளை, திட்டமிட்ட தொடர்ச் சுற்றுப்பயணங்கள், உள்ளூர், ஊராட்சி, நகராட்சி மன்றங்கள், ஒளிவு மறைவற்ற பேச்சு, ஒல்லியானவர்கள், கோரைப்புல் போன்ற தலை முடியுடையவர்கள், கூரையில்லாத வீடு, ஏகபுத்திரன், ஒற்றைத்தலைவலி, எலும்பு முறிவு, தூக்கமின்மை இவையாவும் என் அதிகாரத்தின் கீழ்வருபவையே.ஆதர்ச புருஷரான தந்தை, அவருடன் நல்லஉறவு, தன்னம்பிக்கை, நாலு பேரை வைத்து வேலைவாங்கும் தொழில், இப்படி உங்கள் வாழ்க்கை இருந்தால் உங்கள் ஜாதகத்தில் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று அர்த்தம். மாறாகப் பல்நோய், எலும்பு முறிவு, தாழ்வு மனப்பான்மை, தந்தையுடன் விரோதம், அடிமைத் தொழில் இப்படியாக உங்கள் வாழ்க்கை நகர்கிறதா? "ஆம்" என்பது உங்கள் பதிலானால், நான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம்.நான் மட்டுமே அல்ல. வேறு எந்தக் கிரகம் அளிக்கும் தீயபலனிலிருந்தும் யாரும் தப்பவே முடியாது. எங்கள் தீயபலன் என்பது சீறிக்கிளம்பிவிட்ட துப்பாக்கிக் குண்டு போன்றதாகும். இதை இதயத்தில் வாங்கிக்கொள்வதா? தோளில் தாங்கிக் கொள்வதா என்பது உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்த விஷயம்.இறைவன் பேரருளாளன். எந்த ஜாதகத்தை எடுத்தாலும் எந்தக் கிரகமும் 100% தீயபலனைத் தரும் நிலையில் இருக்காது. அதே நேரம் எந்தக் கிரகமும் 100% நல்ல பலனைத் தரும் நிலையிலும் இருக்காது. எனவே ஒவ்வொரு ஜாதகரும், நான் ஆதிக்கம் செலுத்தும் விஷயங்களில் ஒரு சிலவற்றிலாவது, கொஞ்சமாவது நற்பலனைப் பெற்றே தீருபவர்கள்.என் கட்டுப்பாட்டிலிருக்கும் விஷயங்களை முன்பே சொல்லியுள்ளேன். அவற்றில் உங்கள் நிலைக்கு இன்றியமையாதவை எவையோ! அவற்றை மட்டும் தனியே குறித்துக் கொள்ளுங்கள். அவை தவிர மற்ற விஷயங்களை விட்டு விலகியிருங்கள். என்னுடைய தீயபலன் குறைந்து நற்பலன்கள் அதிகரித்துவிடும்.நீங்கள் எதையாவது பெறவேண்டும் என்றால் எதையாவது இழந்துதான் ஆகவேண்டும். கால்படி சோறு வேகும் பாத்திரத்தில் அரைப்படி அரிசி வேகவைத்தால் என்ன ஆகுமோ, அதுவேதான் குறைந்த அளவு கிரக பலத்தை வைத்துக்கொண்டு அந்தக் கிரகம் ஆளுமை செய்யும் எல்லா விஷயங்களிலும் பலன் பெற நினைத்தாலும் நிகழும் பாத்திரத்தை (கிரகபலத்தை) மாற்ற முடியாது, என்றாலும் அரிசியைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லவா! அகல உழுவதைக்காட்டிலும் ஆழ உழுவது நன்றல்லவா?இதுவரை நான் சொன்னதை வைத்து நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் உள்ளேன் என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள். நான் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களை நீங்கள் செய்து கொண்டால் என்னால் விளையக் கூடிய தீயபலன்கள் குறையும். நல்ல பலன்கள் அதிகரிக்கும்.பரிகாரங்கள்1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க2. காயத்ரி மந்திரம் படிக்கவும்3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.5. நான் அதிகாரம் செலுத்தும் விசயங்களில் இருந்து வருவாயைத் தவிர்க்கவும். நான் அதிகாரம் செலுத்தும் தொழில்களில் நீங்கள் தற்போது இருந்தால் மெல்ல வேறு தொழிலுக்கு (உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் காரகத்வம் வகிக்கும் தொழிலுக்கு) மாறிவிடவும். 6. வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad