தை வெள்ளி விரதம் |
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க... தை வெள்ளி விரதம்...!!
வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால், நமக்கு செல்வத்தை அள்ளிக் கொடுத்து அருள் மழை பொழிவாள். எத்தனை வெள்ளிக்கிழமை வந்தாலும், தை வெள்ளிக்கிழமைகளுக்கும், ஆடி வெள்ளிக்கிழமைகளுக்கும் தனிப்பெருமை உண்டு.
தை வெள்ளி :
அம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமை எத்தனை முக்கியமோ, அதுபோல தை வெள்ளிக்கிழமையும் சிறப்பு வாய்ந்தது. தை வெள்ளிக்கிழமையான இன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அவளை வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வாள்.
அம்மன் ஆலயங்களில் சந்தனக் காப்பு சாற்றி வழிபட்டால், சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும். அம்மன் உள்ளம் குளிர்ச்சியாகி நமக்கு வேண்டும் வரத்தை தருவாள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கடன் தொல்லைகள் நீங்கி நிம்மதி பிறக்கும்.
தை வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோவிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவது சகல தோஷங்களையும், கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கும். மங்கள காரியங்களை விரைவில் நடத்தித் தருவாள் அன்னை பராசக்தி!
வரம் கொடுக்கும் லட்சுமியை வரலட்சுமி என்று அழைத்து, விரதமிருந்து வழிபட ஏற்ற நாள் தை வெள்ளிக்கிழமை ஆகும்.
லட்சுமியை வணங்குவதால் நமது லட்சியக் கனவுகள் நனவாகும். பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும்.
தை வெள்ளி விரதமுறை :
தை மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் அதிகாலையில் வீட்டை மொழுகி, கோலமிட்டு மாவிலைத் தோரணம் கட்டி, லட்சுமிதேவிக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும்.
வீட்டுவாசலில் தாமரைக் கோலம் இட்டு, திருமகளே வருக! செல்வ வளம் தருக! என்று கோலமாவினால் கூட எழுதலாம்.
வீட்டு பூஜையறையில் விநாயகர் மற்றும் வரலட்சுமியின் படத்தை பலகையின் மேல் வைத்து, அதன் அருகில் பஞ்சமுக விளக்கேற்றி வழிபட வேண்டும்.
அருகில் நெல் பரப்பி, அதன் மேல் ஒருதட்டில் அரிசியைப் பரப்பி வைக்கவேண்டும். பூச்சூட்டிய குடம், மாவிலை, தேங்காய் போன்றவற்றை சேர்த்து, லட்சுமி படத்தின் முன்னால் வைக்கவேண்டும்.
தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, இனிப்பு பொருள் ஆகிய நைவேத்தியத்தோடு, லட்சுமி கவசம் மற்றும் வருகைப் பதிகம் பாடி வழிபாடு செய்தால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். பலரும் போற்றும் வாழ்க்கை அமையும்.
லட்சுமி கடைக்கண் பார்க்க தை மாத வெள்ளிக்கிழமைகளில் சமயமாலை படித்து அதிகாலை நேரம் வழிபடுவது நல்லது.
சமயமாலை :
அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும்
துன்பமெல்லாம்
உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும்
உண்மையன்றோ!
இன்றோடு துயர்விலக இனிய தனலட்சுமியே!
மன்றாடிக் கேட்கின்றேன் வருவாய் இதுசமயம்
என்று சமயமாலை லட்சுமியின் முன்னால் பாடுங்கள். உங்கள் கலக்கங்கள் அகலும். கவலைகள் தீரும். பக்கபலமாக பல்வகைச் செல்வங்களையும் லட்சுமிதேவி வழங்குவாள். அத்துடன் மனதில் தெளிவோடு தை வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையைப் பூஜித்தால் இன்பங்கள் யாவும் இல்லம் வந்துசேரும்.
தை வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து சகல செல்வங்களையும் பெறுவோம்...!!