Type Here to Get Search Results !

Translate

உங்கள் பிரார்த்தனைக்கு கடவுள் உதவவில்லையா

உங்கள் பிரார்த்தனைக்கு கடவுள் உதவவில்லையா

உங்கள் பிரார்த்தனைக்கு கடவுள் உதவவில்லையா?

கடவுள் தூணிலிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார். இன்றைய காலகட்டத்தில் ஆன்மிக நாட்டம் அனைவரிடமும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. சிறு பிரச்சனை என்றாலும் அதற்கான வழியை கடவுளிடம் தான் கேட்போம். ஒரு சிலர், நான் வேண்டாத கடவுளும் இல்லை, போகாத கோவிலும் இல்லை. ஆனால் கடவுள் என்மீது எந்த கருணையும் காட்டவில்லை என்பார்கள். நாம் கடவுளிடம் வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனைகளுக்கு அதற்கான வழியை கடவுள் காண்பிக்கிறாரா? என்பதை சிறுகதை மூலம் உங்களுக்கு தெரிவிக்கிறோம்.


ஒரு காட்டில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து இறைவனை நினைத்து தியானம் செய்து கொண்டிருக்கும்.

திடீரென்று ஒருநாள் கழுகுக்கு இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா? என்று சந்தேகம் வந்தது. பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டது.

ஒருநாள் அந்தக் கழுகு இன்று எனக்கு உணவு கிடைக்குமா? இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே. என்று யோசித்தது.

உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று, இறைவா, இன்று எனக்கு உணவு கிடைக்குமா? என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.

உடனே விண்ணிலிருந்து ஒரு குரல். உனக்கு இன்று உணவு உண்டு என்று பதில் கூறியது. மகிழ்ச்சியடைந்த கழுகு இன்று நமக்கு இரை தேடும் வேலை இல்லை, எப்படியும் உணவு கிடைத்துவிடும்; என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.

நேரம் செல்லச் செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது. ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது. மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது.

நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.

அப்போது ஒரு குரல் கேட்டது. குழந்தாய்! சாப்பிட்டாயா? என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது. குழந்தாய் சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது.

கழுகு பின்னால் சென்று பார்த்தது. அங்கே ஒரு பெரிய எலி இறந்து கிடந்தது. இதைக் கண்டவுடன் கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம், இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா? என்றது.

இறைவன்! குழந்தாய், உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது. நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய். திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் இருந்தால் உணவு எப்படிக் கிடைக்கும்.

கடுகளவேனும் முயற்சி வேண்டும். அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும் என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.

அன்று முதல் கழுகு முயற்சியை தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது.

தத்துவம் :

கடவுள் நம்பிக்கை அனைவரிடமும் இருக்க வேண்டும். ஆனால் அனைத்திற்கும் கடவுளையே நம்பி இருக்கக்கூடாது. சிறிதளவு நாம் முயற்சி செய்தால் தான் நாம் வெற்றியடைய முடியும். முயற்சி இருக்கும் இடத்தில் கடவுளின் அனுகிரகமும் இருக்கும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad