Type Here to Get Search Results !

Translate

கண்ணில் உறைகின்ற தெய்வ தியானம் - தியான பயிற்சி - Meditation

 கண்ணில் உறைகின்ற தெய்வ தியானம்

கண்ணில் உறைகின்ற தெய்வ தியானம்
கண்ணில் உறைகின்ற தெய்வ தியானம்

இந்தப்பகுதியில் அத்யாத்ம தியானம் பற்றி பேசுகிறோம். இங்கே தெய்வம் கண்ணில் உறைபவராகப் போற்றப் படுகிறார். இவரைத் தியானிப்பது பற்றியும், தியான பலனைப் பற்றியும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

இந்தத் தியானத்திற்கு 8 அங்கத் தியானங்கள் உள்ளன. இந்தத் தியானங்களுக்கும் ஜோடி ஜோடியாக தேவதைகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றனர். இவர்களில் ஒருவர் ஆதாரமாக இருப்பவர், மற்றவர் அவரைச் சார்ந்திருப்பவர். இந்த இருவரும் இவ்வாறு இணைபிரியாதவர்கள். இணைபிரியாத இந்த இரட்டை தேவதையர், அதுபோலவே இணைபிரியாத இரண்டு பிரதீகங்களில் ஏற்றி தியானிக்கப்படுகின்றனர். 4 ஜோடி தேவதைகள், 2 ஜோடி பிரதீகங்களில் ஏற்றி தியானிக்கப்படு கின்றனர். இவ்வாறு இந்த அத்யாத்ம தியானத்தில் ஒரு முக்கியத் தியானமும் 8 அங்கத் தியானங்களும் இடம்பெறுகின்றன.

அங்கத் தியானங்கள்

இப்போது அத்யாத்ம தியானம். வாக்கே ரிக் மந்திரங்கள், பிராணன் ஸாம மந்திரங்கள். ஸாம மந்திரங்கள் ரிக் மந்திரங்களில் நிலைபெற்றுள்ளன. எனவே ஸாம மந்திரங்கள் ரிக் மந்திரங்களில் நிலைபெற்றுள்ளதாகப் பாடப்படுகிறது.


வாக்கே ‘ஸா', பிராணன் 'அம'; இரண்டும் சேர்ந்தால் ஸாமம்.


8 அங்கத் தியானங்கள் இந்தப் பகுதியில் இடம்பெறுவதாகக் கண்டோம். இதில் முதல் தியானம் இந்த மந்திரத்தில் கூறப்படுகிறது.

வாக்கு மற்றும் பிராண தேவதைகள் ரிக்-சாமவேத மந்திரங் களிலும், 'ஸா'-'அம'விலும் ஏற்றப்பட்டு செய்யப்படுகின்ற தியானம் இது.

கண்ணே ரிக் மந்திரம், கண்ணில் உறையும் தெய்வம் ஸாம மந்திரம். ஸாம மந்திரம் ரிக் மந்திரத்தில் நிலைபெற்றுள்ளது. எனவே ஸாம மந்திரம் ரிக் மந்திரத்தில் நிலைபெற்றுள்ளதாகப் பாடப்படுகிறது.

கண்ணே ‘ஸா', கண்ணில் உறையும் தெய்வம் 'அம'; இரண்டும் சேர்ந்தால் சாமம்,

கண் மற்றும் கண்ணில் உறையும் தெய்வம் ரிக்சாமவேத மந்திரங்களிலும், 'ஸா'-'அம'விலும் ஏற்றப்பட்டு செய்யப்படுகின்ற தியானம் இது.

இதயக் குகையில் மட்டுமல்ல, இறைவன் உடம்பு முழுவதிலுமே நிறைந்துள்ளார்; அவரை உடம்பில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம் என்பதை உபநிஷதங்கள் கூறுகின்றன. வலது கண்ணில் இறைவனைத் தியானிப்பது பற்றி இந்த மந்திரம் கூறுகிறது.!

காதே ரிக் மந்திரம், மனம் ஸாம மந்திரம். ஸாம மந்திரம் ரிக் மந்திரத்தில் நிலைபெற்றுள்ளது. எனவே ஸாம மந்திரம் ரிக் மந்திரத்தில் நிலைபெற்றுள்ளதாகப் பாடப்படுகிறது.

காதே ‘ஸா', மனம் ‘அம'; இரண்டும் சேர்ந்தால் ஸாமம்.

காது மற்றும் மன தேவதைகள் ரிக்வேத-சாமவேத மந்திரங்களிலும், 'ஸா'-'அம’விலும் ஏற்றப்பட்டு செய்யப் படுகின்ற தியானம் இது.

கண்ணின் வெண்ணிறப் பகுதி ரிக் மந்திரம், நீலமாகவும் அடர்ந்த கறுப்பாகவும் இருக்கும் பகுதி ஸாம மந்திரம், ஸாம மந்திரம் ரிக் மந்திரத்தில் நிலைபெற்றுள்ளது. எனவே ஸாம மந்திரம் ரிக் மந்திரத்தில் நிலைபெற்றுள்ளதாகப் பாடப்படுகிறது.

கண்ணின் வெண்ணிறப் பகுதி ‘ஸா', நீலமாகவும் அடர்ந்த கறுப்பாகவும் இருக்கும் பகுதி ‘அம'; இரண்டும் சேர்ந்தால் ஸாமம்.

கண்ணின் வெண்ணிறப் பகுதி மற்றும் நீல, அடர்ந்த கறுப்புப் பகுதி தேவதைகள் ரிக்-சாமவேத மந்திரங்களிலும், 'ஸா'-'அம'விலும் ஏற்றப்பட்டு செய்யப்படுகின்ற தியானம் இது.

கண்ணில் உறைகின்ற தெய்வ தியானம்

கண்ணின் உள்ளே தெரிகின்ற தெய்வமே ரிக் மந்திரம்; அவரே ஸாம மந்திரம், அவரே தனி மந்திரங்கள், அவரே யஜுர் மந்திரம், அவரே வேதங்கள். சூரியனில் தெரிகின்ற அந்தத் தெய்வமும் கண்ணில் தெரிகின்ற இந்தத் தெய்வமும் ஒருவரே. அவரது பகுதிகளே இவரது பகுதிகள். அவரது திருநாமமே இவரது திருநாமம்.

கண்ணில் தெரிகின்ற தெய்வமும் சூரியனில் உறை கின்ற பொன்னொளிர் தெய்வமும் ஒருவரே என்று இந்த மந்திரம் கூறுகிறது. எனவே சூரியனில் உறைகின்ற பொன்னொளிர்

தெய்வத்தின் பண்புகள் அனைத்தும் இந்தத் தெய்வத்திற்கும் பொருந்தும்; அவ்வாறே இவரைத் தியானிக்கவும் வேண்டும்.

கண்ணில் உறைகின்ற தெய்வத்தைத் தியானிப்பதன் பலன்

கண்ணில் உறைகின்ற தெய்வம், இந்த உலகத்திற்குக் கீழேயுள்ள உலகங்கள் அத்தனையையும் ஆள்பவர், வீணையை மீட்டி இசை பாடுபவர்கள் அவரையே போற்றுகிறார்கள். அவரைப் போற்றி தியானிப்பவர்கள் செல்வந்தர்கள் ஆகிறார்கள்.

கண்ணில் தெரிகின்ற பொன்னொளிர் தெய்வத்தைத் தியானிப்பவர்கள் பூமிக்குக் கீழே உள்ள உலகங்களையும் அங்குள்ள சுகபோகங்களையும் பெறுகிறார்கள்; செல்வந்தர்கள் ஆகிறார்கள்.

சூரியனில் உறைகின்ற பொன்னொளிர் தெய்வமும் கண்ணில் உறைகின்ற தெய்வமும் ஒருவரே என்பதை அறிந்து, தியானித்து, உத்கீதத்தை இசைப்பவன் இருவரையும் போற்றுகிறான். சூரிய மண்டலத்திற்கு மேலான உலகங்களையும் தேவர்களின் சுகபோகங்களையும் அவன் அடைகிறான்.

கண்ணில் உறைகின்ற தெய்வத்தைத் தியானிப்பவன் அவரிலிருந்து கீழேயுள்ள உலகங்களையும் மனித சுகபோகங் களையும் அடைகிறான். எனவே, இதனை அறிந்து, சாம கானம் சைக்கின்ற புரோகிதர் (உத்காதா) யாகத்தை நடத்துபவ ரான எஜமானரிடம், 'இந்த சாம கீதத்தை இசைத்து நான் உங்கள் எந்த ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும்?' என்று கேட்க வேண்டும். ஏனெனில் இவ்வாறு உணர்ந்து சாம கீதத்தை இசைப்பவன் ஆசைகளைப் பூர்த்தி செய்ய வல்லவன். அவனே சாம கீதத்தை இசைத்து ஆசைகளைப் பூர்த்தி செய்கிறான்.

சூரியனில் உறைகின்ற பொன்னொளிர் தெய்வமும் கண்ணில் உறைகின்ற தெய்வமும் ஒருவரே என்பதை அறிந்து தியானித்து, உத்கீதத்தை இசைப்பவன் சூரிய மண்டலத்திற்கு மேலே உள்ள உலகங்களையும் அங்குள்ள சுகபோகங்களையும்,அது போலவே, பூமிக்குக் கீழுள்ள உலகங்களையும் அங்குள்ள சுகபோகங்களையும் அடைகிறான்; மனித உலகில் பெரும் செல்வந்தனாக வாழ்கிறான். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad