அனைத்திற்கும் மேலான பரம்பொருள் தியானம் – பகுதி -1
![]() |
தியான பயிற்சி |
இறைவன் அனைத்திற்கும் மேலானவர் , அனைத் திலும் சிறந்தவர் . அவரை இந்தப் பண்புகள் நிறைந்த வராகப் பாவித்து, அவரை உத்கீதமாகத் (ஒங்கரமாக ) தியானிப்பது பற்றி இந்தப் பகுதியில் கூறுகிறோம் . இன்று மற்றும் நாளைய பகுதிகளில் இது விளக்கப்படும். மூன்று பண்டிதர்களுக்கிடையே நடைபெறுகின்ற உரையாடல் போல் இந்தப் பகுதிகள் அமைந்துள்ளன. இந்த பகுதி தியானத்திற்கான ஒரு முன்னுரைபோல் அமைகிறது.
அனைத்திற்கும் ஆதாரம் எது?
முன்னொரு காலத்தில், உத்கீத தியானத்தில் சிறந்தவர்களான மூவர் இருந்தனர். அவர்கள் சலாவத்யரின் மகனான சிலகர், தல்ப்ய வம்சத்தைச் சேர்ந்த சைகிதாயனர் மற்றும் ஜீவலரின் மகனான பிரவாஹணர். அவர்கள் ஒருநாள் ஒன்றுகூடி, ‘நாம் உத்கீத தியானத்தில் சிறந்தவர்களாக இருக்கிறோம். எல்லோரும் ஒத்துக்கொள்வதானால் நாம் உத்கீதத்தைப்பற்றி கலந்துரையாடுவோம்' என்று கூறினர். (அதாவது ஓங்கார தியானத்தைப் பற்றி )
அப்படியே ஆகட்டும்' என்று கூறி மூவரும் உட்கார்ந்தார்கள். அப்போது பிரவாஹணஜைவலி, ‘நீங்கள் இரண்டு பிராமணர்களும் முதலில் பேசுங்கள். நான் அவற்றைக் கேட்கிறேன்' என்று கூறினார்.
சிலக சாலாவத்யர் சைகிதாயன தால்ப்யரிடம், 'நீங்கள் அனுமதித் தால் நான் முதலில் கேட்கிறேன்' என்று கூறினார். அதற்கு சைகிதாயனர், ‘கேளுங்கள்' என்றார்.
சிலகர்: ‘சாம கீதத்தின் ஆதாரம் எது?'
தால்ப்யர்: ‘ராகம்.'
சிலகர்: ‘ராகத்தின் ஆதாரம் எது?'
தால்ப்யர்: ‘பிராணன்.'
சிலகர்: பிராணனின் ஆதாரம் எது?'
தால்ப்யர்: 'உணவு.'
சிலகர்: ‘உணவின் ஆதாரம் எது?'
தால்ப்யர்: ‘தண்ணீர்.'
மற்ற வேதங்களைப் போலன்றி இசையை ஆதார மாகக் கொண்டது சாமவேதம். இசைக்கு ஆதாரமாகத் திகழ்வது ராகம். போதிய பிராண சக்தி இல்லாமல் ராக ஆலாபனை செய்வது இயலாத காரியம். பிராண சக்தி உணவிலிருந்தே பெறப்படுகிறது. நீரின்றி உணவில்லை. எனவேதான் இவை ஒவ்வொன்றும் முந்தையதின் ஆதார மாகக் கூறப்பட்டது.
சிலகர்: 'தண்ணீரின் ஆதாரம் எது?'
தால்ப்யர்: ‘சொர்க்கலோகம்.
சிலகர்: ‘சொர்க்கலோகத்தின் ஆதாரம் எது?'
தால்ப்யர்: ‘சொர்க்க லோகத்தைக் கடந்து செல்ல இயலாது. சாம கீதம் சொர்க்கம் என்றே புகழப்பட்டுள்ளது. எனவே நாம் சாம கீதத்தைச் சொர்க்கலோகத்தில் நிலைநிறுத்துவோம்.'
தண்ணீரின் ஆதாரமாகச் சொர்க்கலோகம் கூறப்பட் டுள்ளது. மழை, மேலிருந்து பொழிவதைக் கருத்தில் கொண்டு இது கூறப்பட்டுள்ளது.
தால்ப்யருக்குச் சொர்க்கலோகம் வரைதான் தெரிந்திருந்தது. அதற்கு மேல் அவரால் கூற இயலவில்லை. எனவே அங்கேயே நிறுத்தினார். அவர் விட்ட இடத்தில் சிலகர் தொடர்ந்தார்.
பிறகு, சிலகர் தால்ப்யரிடம், ‘தால்ப்யரே, நீங்கள் சாம கீதத்தை அதன் சரியான ஆதாரத்தில் நிலைநிறுத்தவில்லை. இப்போது உங்களிடம் யாராவது, “உங்கள் தலை வீழ்ந்துவிடும்” என்று கூறினால் அது வீழ்ந்துவிடும்' என்று கூறினார்.
சாம கீதத்தின் ஆதாரம் எது என்பது கேள்வி. பல்வேறு பதில்களைத் தொடர்ச்சியாகக் கூறிய பிறகு தால்ப்யரால் தொடர இயலவில்லை. அவர் அறிந்திருந்ததில் சொர்க்கலோகம்தான் மிக உயர்ந்த இடமாக இருந்தது. எனவே அவர் அந்த இடத்தில் நிறுத்தினார். ஆனால் உண்மையில் சொர்க்கலோகம் மிக உயர்ந்ததோ, மிகச் சிறந்ததோ அல்ல. உயர்ந்ததோ, சிறந்ததோ அல்லாத ஒன்றை மிக உயர்ந்ததாக, மிகச் சிறந்ததாக தால்ப்யர் கூறியதால் உண்மைக்குப் புறம்பான ஒன்றைக் கூறிய குறைபாட்டிற்கு உள்ளானார்.
உபநிஷதங்களிளும் புராணங்களிலும் பல இடங்களில் இவ்வாறு, 'நீங்கள் சரியான பதிலைச் சொல்லாவிட்டால் தலை வீழ்ந்துவிடும், தலை சிதறிவிடும்' என்றெல்லாம் வருவதைக் காண முடியும்.
இவற்றை அவ்வாறே பொருள்கொள்ளக் கூடாது. 'தலை' என்பதை 'அறிவு' என்று எடுத்துக்கொண்டு, 'உங்கள் அறிவு குறைபாடு உடையது; எனவே தண்டனைக்கு உரியது' என்று நறுக்கென்று சுட்டிக்காட்டுவதாகக் கொள்ள வேண்டும்.
தால்ப்யர்: ‘தாங்கள் அனுமதித்தால் தங்களிடமிருந்து அதனை நான் கற்றுக்கொள்கிறேன்.'
சிலகர்; 'கற்றுக்கொள்ளுங்கள்.'
தால்ப்யர்: ‘சொர்க்கலோகத்தின் ஆதாரம் எது?'
சிலகர்: 'இந்த உலகம்,'
தால்ப்யர்: ‘இந்த உலகின் ஆதாரம் எது?'
இந்த உலகைக் கடந்து செல்ல இயலாது. சாம கீதம் இந்த உலகம் என்றே புகழப்பட்டுள்ளது. எனவே நாம் சாம கீதத்தை இந்த உலகத்தில் நிலை நிறுத்துவோம்.'
தனக்குத் தெரியாத ஒன்றை மற்றவரிடம் ஒத்துக் கொண்டு, அவரிடமிருந்தே அதனைக் கற்றுக்கொள்ளும் பக்குவமும் பணிவும் தால்ப்யரிடம் இருந்தது. எனவே சிலகரிடமிருந்தே அதனைக் கற்றுக்கொள்ளத் தயாரானார்.
சொர்க்கலோகத்தின் ஆதாரமாக இந்த உலகம் அதாவது, பூமி கூறப்பட்டுள்ளது. பூமியில் வாழ்கின்ற மனிதர்கள் செய்யும் யாக யஜ்ஞங்களால்தான் தேவர்கள் வாழ்கின்றனர்; யாக யஜ்ஞங்களில் அளிக்கப்படுகின்ற ஆஹுதியை ஏற்றுக்கொண்டு, பிரதியாக பூமிக்கு அவர்கள் மழையைத் தருகிறார்கள்.
படைப்பின் ஆரம்பத்தில் பிரம்ம தேவர் யாகத்துடன் மனிதர்களைப் படைத்து, “இதனால் வளம் பெறுங்கள். இது நீங்கள் விரும்பியதைத் தருவதாக இருக்கட்டும். நீங்கள் யாகங்களால் தேவர்களை வழிபடுங்கள். தேவர்கள் உங்களை வளம் பெறச் செய்வார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து மேலான நன்மையை அடையுங்கள்'' என்று கூறினார்' என்கிறது பகவத்கீதை (3:10-11). எனவே சொர்க்கலோகத்திற்கு ஆதாரமாக பூமி கூறப்படுகிறது. .
பூமியை விட மேலான ஒன்றைச் சிலகரும் அறிந் திருக்கவில்லை. எனவே பூமியையே மிக மேலானதாகக் கொண்டு, அதையே உத்கீதத்தின் ஆதாரம் என்று அவர் தெரிவித்தார்.
அப்போது, பிரவாஹணஜைவலி சாலாவத்யரிடம், ‘சாலாவத்யரே, நீங்கள் சாம கீதத்தின் ஆதாரமாகக் கூறியது குறுகியதாக உள்ளது. இப்போது உங்களிடம் யாராவது, “உங்கள் தலை வீழ்ந்துவிடும்" என்று கூறினால் அது வீழ்ந்துவிடும்' என்று கூறினார். உடனே சாலாவத்யர், 'தாங்கள் அனுமதித்தால் தங்களிடமிருந்து அதனை அறிந்துகொள்கிறேன்' என்று கூறினார். 'அறிந்துகொள்ளுங்கள்' என்று பிரவாஹண ஜைவலி தெரிவித்தார்.
அனைத்திற்கும் மேலான பரம்பொருள் தியானம் பகுதி – 2 ல் நாளை பாப்போம். நன்றி