ஆங்கிரஸ தியானம் (பிராணன் அங்கங்களின் சாரம்)
இதில் அங்கங்களின் சாரமான (அங்க+ரஸ) பிராணன் உத்கீதமாகத் தியானிக்கப்படுகிறது.
அங்கிரஸ முனிவர் பிராணனை உத்கீதமாகத் தியானம் செய்தார். இதுவே ஆங்கிரஸ தியானம் என்று அழைக்கப்படுகிறது. அங்கங்களின் சாரமான பிராணனைத் தியானம் செய்வதாலும் இந்தப் பெயரில் அழைக்கப்படுவதாகக் கூறலாம்.
ஆங்கிரஸ தியானம் என்பது அடுத்த வகை பிராண-உத்கீத தியானம் ஆகும். இதில் பிராணன் அங்கங்களின் சாரமாகக் கருதப்படுகிறது. புலன்களையும் மனத்தையும் இயக்குவது பிராணனே என்று ஏற்கனவே கண்டோம். பிராணன் இல்லா விட்டால் புலன்களின் இயக்கம் கிடையாது, அங்கங்கள் செய லிழந்து விடுகின்றன. எனவே பிராணன் அங்கங்களின் சாரம் ஆகும். இந்தப் பண்புடன் கூடிய பிராணனை உத்கீதமாகத் தியானம் செய்வதால் இது ஆங்கிரஸ தியானம் ஆயிற்று.
அங்கிரஸ முனிவர் இந்த தியானத்தைச் செய்து, தியானத் தின் பலனைப் பெற்றதாலும் ஆங்கிரஸ தியானம் என்ற பெயர் வழங்கலாயிற்று.
இறைவனை அடைவதற்கான மற்றும் இகவுலக, பரவுலக இன்பங்களை அடைவதற்கான வழிகளே வித்யைகள் அல்லது தியானங்கள். ஏற்கனவே நிலவிய அல்லது தாங்களே கண்டுபிடித்த குறிப்பிட்ட வகை தியானங்களை முனிவர்கள் பின்பற்றினர். அவற்றை உரிய முறையில் பழகி, அந்த தியானத்தின் பலனை அவர்கள் பெற்றனர். இவ்வாறு ஒரு முனிவர் ஒருவகை தியானத்தில் நிறைநிலையை அடைந்துவிட்டால் அல்லது சித்தி பெற்றுவிட்டால் அவர் அந்த தியானத்தின் பெயரால் பிரபலம் அடைந்தார்.
இத்தகைய முனிவர்கள் எண்ணற்றோர் பண்டைய இந்தியா வில் கங்கை, சிந்து, சரஸ்வதி நதிக்கரைகளில் வாழ்ந்தனர்.
அவர்கள் ஒவ்வொருவரின் குடிசையும் ஒரு கல்விக்கூடம் ஆயிற்று. அவரிடம் வந்து பலர் அந்தக் குறிப்பிட்ட தியானத்தைப் பயின்று சென்றனர்.