சிவபூஜைக்கு உரிய மலர்களும் தாரையும்
நைமிசாரண்ய வாசிகள், சூதமா முனிவரைப் பார்த்து வியாசரின் சீடரே! சிவபெருமானை எந்தெந்த மலர்களால் பூஜித்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்? என்று கேட்டார்கள். சூதமா முனிவர் கூறலானார். தவஞானிகளே! பெருஞ் செல்வம் பெற விரும்புவோன் தாமரை மலர், வில்வம், சதபத்திரம் ஸங்கபுஷ்பம் ஆகியவற்றால் லக்ஷணக்கணக்கில் பூஜித்தால், சந்தேகமில்லாமல் பெருஞ் செல்வத்தைப் பெறுவான்.
தாமரை மலர்கள் இருபது கொண்டது பிரஸ்தம், சதபத்திரம் ஆயிரம் கொண்டது அர்த்த பிரஸ்தம் வில்வதளம் ஆயிரம் கொண்டது பிரஸ்தம்(பதினாறு பலம் எடையுடையது பிரஸ்தம்) மஹாபூஜையில் மலர்களைக் கொண்டு பூஜிக்கும்போது மலர்களை எண்ணிக்கொண்டே பூஜிப்பது தவறாகையால் இப்படி நிறுத்துப் பூஜிக்க வேண்டும்.
இராஜ போகத்தை விரும்புவோன் பழுதில்லாத பத்து கோடி மலர்களால் பார்த்திவலிங்கத்தைப் பூஜிக்க வேண்டும், அல்லது பத்து கோடி வில்வதளத்தை சுகந்த சந்தனத்தில் தோய்த்துப் பூஜிக்க வேண்டும் இதற்குத் தாமரை மலர்கள் அல்லது சங்க புஷ்பங்கள் பூஜிக்கத் தக்கவை பிறகு தூபதீப நைவேத்ய, அர்க்ய, ஆரார்திக பிரதக்ஷிண, நமஸ்கார, க்ஷமாபண, விஸர்ஜனம் முதலியவற்றைச் செய்தால், இஷ்ட போகமும் ராஜரீகமும் உலகநாயகரான சிவபெருமான் திருவருளால் கிடைக்கும்.
பிரதானித்துவத்தை விரும்புவோன். ஐந்து கோடி மலர்களாலும் சிறையிலிருந்து நீங்க விரும்புவோன் லக்ஷம் புஷ்பங்களாலும் நோய் நீங்க விரும்புவோன் ஐம்பதாயிரம் மலர்களாலும், அழகான மங்கையை மணஞ்செய்து கொள்ள விரும்புவோன் இருபத்து ஐயாயிரம் மலர்களாலும் கல்வியில் விருப்பம் கொண்டவன் பன்னிராயிரத்து ஐநூறு மலர்களாலும் பகைவன் வெற்றி கொள்ள விரும்புவோனும் பகைவனை ஊரை விட்டு விரட்ட விரும்புவோனும் பத்தாயிரம் மலர்களாலும் பூஜிக்க வேண்டும். மாரணஞ் செய்ய விரும்புவோன் நான்கு லக்ஷம் மலர்களாலும் மோகனஞ் செய்ய வேண்டியவன் இரண்டு லட்சம் மலர்களாலும் ஒரு பிரபுவை வெல்ல விரும்பியவன் கோடி மலர்களாலும் வசியஞ் செய்யவும் கீர்த்தியடையவும் வேண்டியவர்கள் பதினாயிரம் மலர்களாலும் முக்தி வேண்டியவன் ஐந்து கோடி மலர்களாலும் ஞானம் வேண்டியவன் கோடி மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
சிவபெருமான் பிரத்தியட்சமாக வேண்டியவன் அரைக் கோடி மலர்களாலும் அர்ச்சித்து மிருத்யுஞ்சய மந்திரத்தை ஐந்து லக்ஷம் உரு ஜபிக்க வேண்டும், லக்ஷ மலர்களால் செய்த அர்ச்சனை தேகத் தூய்மையையும் இரண்டு லட்சத்தில் செய்தது ஜன்மாந்தர ஞானமும் மூன்று லட்சத்தால் கர்மநாஞானமும் நான்கு லட்சத்தால் ஸ்வப்னதரிசனமும், ஐந்து லட்சத்தால் சிவப்பிரத்தியக்ஷமும் பத்து லட்சத்தால் எல்லாம் பயன்களும் கைகூடும்
முக்தி நிலை அடைய விரும்புவோன் லட்சம் தருப்பையாலும் தீர்க்காயுளை விரும்புபவன் லட்சம் அறுகினாலும் புத்திரப் பேற்றை விரும்புபவன் லட்சம் கருவூமத்தையாலும் புகழை விரும்புபவன் லட்சம் அகத்திப் பூவினாலும் சித்தி முக்திகள் வேண்டியவள். லட்சம் துளசியாலும் சத்துருக்ஷ்யம் வேண்டியவன். லட்சம் லட்சம் வெள்ளெருக்கமலர் மாதுளைமலர் உற்பல மலர், சப்பாத்தி மலர்களாலும், ரோக நீக்கம் விரும்பியவன் கரவீர மலர்களாலும் விஷ்ணுவின் அனுக்கிரகத்தை வேண்டுவோன் அதஸிப் பூவினாலும் முக்திகாமி வன்னியினாலும் அழகான பெண்ணை அடைய விரும்புவோன் மல்லிகையாலும் தானிய சம்பத்தை வேண்டியவன் மலை மல்லியாலும் வஸ்திர சம்பத்தை வேண்டியவன் கோங்க மலராலும் மனநிர்மலத்தை வேண்டுவோன் நிர்க்குண்டியாலும் பூஜிக்க வேண்டும். சிவப் பிரீதியான மலர்கள் கிடைக்கா விட்டால் சண்பகம், தாழை தவிர்த்து, இதர மலர்களால் பூஜிக்கலாம் இவ்விரண்டு மலர்களும் சிவபூஜைக்கு யோக்கியமற்ற மலர்கள் இவை அவ்வாறு நீக்கப்பட்டதற்கான காரணத்தைப் பின் சொல்லுகிறேன். சிவப்பிரீதியான மலர்கள் லட்சங்கொண்டு அர்ச்சித்தால் அனந்தமான பயன்கள் கிடைக்கும் இனி சிவபெருமானுக்குத் தான்யம் சமர்ப்பிக்கும் பயன்களைச் சொல்லுகிறேன்.
சிவபெருமானுக்கு சுவேத அட்சதையை (வெள்ளையான முனை முறியாத அரிசியை) லட்சம்(ஒன்பது பிரஸ்தமும் இரண்டு பலமும்) சமர்ப்பித்தால் சகல சம்பத்தும் உண்டாகும். இது போதாயன முனிவர் அருளிய ருத்ரநியாஸ விதானப்படி சுந்தர வஸ்திரந்தரித்துப் பிறகு சமர்ப்பிக்கத் தக்கது. இதற்கு வில்லப் பழத்தை வைத்து தூபதீப ஆராதனைகள் செய்தால் பூஜாபலன் கைகூடும் இவ்வாறு செய்பவன் இருபது அந்தணருக்கு அன்னமிட்டு நூற்றெட்டு ஸ்ரீருத்திர காயத்திரி ஜெபிக்க வேண்டும். எள் அட்சதை பதினொரு பலம் சமர்பித்தால் சகல பாபங்களும் நாசமாகும். இதற்குப் பிராமண பூஜையும் செய்ய வேண்டும். யவை அட்சதை லட்சம்( எட்டரை பிரஸ்தமும் இரண்டு பலமும்) சமர்ப்பித்தால் சுவர்க்க போகம் கிடைக்கும். இதற்கு பிரஜாபத்யகிருச்சிரத்திற்குச் செலவாகும் தொகையைப் பிராமண போஜனத்திற்குச் செலவிடலாம். கோதுமை அட்சதை லட்சம் (நூற்று இருபத்தெட்டு பலம்) சமர்ப்பித்தால் ராஜாதிபத்தியம் உண்டாகும். இதற்கும் மேலே சொன்ன அளவு பிராமண போசனம் செய்விக்கப்பயறு அக்ஷதை லட்சம் (ஏழரை பிரஸ்தமும் இரண்டு பலமும்) சமர்ப்பித்தால் சுக ஜீவனமும் உண்டாகும், உளுந்து அட்சதை லட்சம் (பதினைந் தரைப் பிரஸ்தம்) சமர்ப்பித்தால் இஷ்டகாமியங்கள் கிடைக்கும் இதற்கு பதினொரு பிராமணரை போக்ஷிக்கவும் சாமைதினை முதலிய தானிய அட்சதை (சுமார் ஒரு பிரஸ்தம்) சமர்ப்பித்தால் அறம், பொருள், இன்பம், வீடு (கர்ம அர்த்த காம மோட்சங்கள்) கிடைக்கும். இதற்குப் பன்னிரண்டு பிராமணர்களுக்கு அன்னமிடவும் கடுகு இலட்சம் (இருபது பலம்) சமர்ப்பித்தால் சத்துரு மாரணமாகும் இதற்கு நூற்றியொரு பிராமண போஜனமும் ஒரு கோதானமும் ஒரு ரிஷபதானமும் செய்க, இவை தவிர வேறு பல விதமான தானியங்களாலும் பூஜை செய்யலாம் துவரை இலையை குங்குமம் கலந்த சந்தனத்தில் தோய்த்துப் பூஜித்தால் பற்பல பயன்கள் சித்திக்கும் இவ்வாறு சூத முனிவர் கூறியதும் நைமி சாரண்யவாசிகள் அவரை நோக்கி, சிவஞானச் செல்வரே! தானியங்கள் ஒரு லட்சம் எவ்வளவு எடையிருக்கும் என்று சொன்னீர்கள்? இனி மலர்கள் லட்சத்துக்கு எவ்வளவு எடையிருக்கும் என்பதையும் சொல்ல வேண்டும் என்றார்கள். சூதமாமுனிவர் சொல்லலானார்
முனிவர்களே, சங்கு புஷ்பம் ஒரு பிரஸ்தமும் ஜாதி மல்லிகை இருபது பிரஸ்தமும், திலபுஷ்பம் பத்தொன்பது பிரஸ்தமும், கரவீரம் நாற்பது பிரஸ்தமும் நிர்க்குண்டி நாற்பது பிரஸ்தமும், கோங்கு திரிசனம் இவை பத்துப் பிரஸ்தமும் லட்சம் மலர்களாகையால் பிற மலர்களை இவ்வாறே எடை நிர்ணயித்துப் பூஜிக்க வேண்டும். இனித் தாரா பூஜையைச் சொல்லுகிறேன்.
சிவலிங்கப் பெருமானின் மீது சொரியும் படி தாராபாத்திரங்கட்டி, அதனால் பூசித்தால் ஜ்வரம் முதலியவை நீங்கும் சதருத்திரம் ஏகாதசருத்திரம், ருத்திரம் புருஷஸுகம், மிருத்யுஞ்ஜயம், காயத்திரி சிவ நாமங்கள் முதலியவற்றாலும், ஆகம யுக்தமான பத்திரங்களாலும் தாரா பூஜையைச் செய்ய வேண்டும் ஜலதாரை பூசையால் சுக விருத்தியும் சந்தான விருத்தியும் கைகூடும். நெய்யைத் தாரா பாத்திரத்தில் சொரிந்து அபிஷேகம் செய்தாலும் செய்வித்தாலும் வமிச விருத்தியும் ரோக நாசமும் உண்டாகும், இது நபும்சகம் வந்தபோது, பத்தாயிரம் மந்திர ஜபத்தோடும், பிரசபத்ய கிருச்சிர செலவின் அளவு தொகைக்கு பிராமண போஜனத்தோடு செய்யத்தக்கது, சர்க்கரை கலந்த பாலை தாரா பாத்திரத்தில் அபிஷேகம் செய்தால் ஒருவன் தன்மேல் செய்த பிரயோகம் ஒழியும். இது பதினாயிரம் மந்திராஜபம் முடியுமளவும் தாரை பொழிய வேண்டும். சத்துரு உச்சாடனமும் பயமும் நீங்கும். பரிமளங் கலந்த தைலதாரை சத்ருக்களைத் தொல்லைப்படுத்தும், தேன் தாரைபற் பல ரோகங்களைப் போக்கும். கருப்பஞ்சாற்று தாரை சகல துக்கங்களையும் ஒழிக்கும், சுத்தமான ஜலதாரை மோட்சப்பலன் கொடுக்கும். இவை ஒவ்வொன்றும் தீமையை அகற்றி சுகத்தை கொடுக்கத் தக்கவை, இவற்றைப் பதினாயிரம் மந்திர சபத்தோடும் பதினொரு பிராமண போசனத்தோடும் செய்வித்தால் இஷ்டகாரியங்கள் கைகூடும். முனிவர்களே! நீங்கள் கேட்டவற்றுக்குதக்க பதிலை சொன்னேன். இவ்விதமாகப் பூஜித்தவர்கள் சகலபாபங்களும் நீங்கப்பெறுவர், ஸ்கந்தர், பார்வதி, கணேசர் இவர்களுடன் கூடிய சிவபெருமானை ஒருமுறையாவது பூஜித்தவனுக்கு இம்மை மறுமைப் பயன்கள் கைகூடி கோடி சூரியப் பிரகாசமான விமானத்தில் ஏறி அவ்வுலகை அடைந்து அங்கு அநேக தேவதாசிகள் நடனம் செய்யவும் இன்னிசை முழங்கவும் சிவபெருமானைப்போல, எந்த உலகத்தில் எவ்வளவு காலம்வாழ வேண்டும் என்று விரும்புவார்களோ, அவ்வுலகத்தில் அத்தனைக் காலம் அப்படியே வாழ்வார்கள் என்பதில் ஒரு சிறிதும் சந்தேகமில்லை.